தஞ்சோங் கத்தோங் சாலையில், ஒன் ஆம்பர் (One Amber) கூட்டுரிமை வீடுகளுக்கு அருகில் திடீரென புதைகுழி ஒன்று உண்டானதைத் தொடர்ந்து பெண் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
பொதுமக்கள் அந்தப் பகுதியை தவிர்க்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தஞ்சோங் காத்தோங் ரோட்டுக்கும் மவுண்ட்பேட்டன் ரோட்டுக்கும் இடைப்பட்ட சந்திப்பில் மாலை 5 மணியளவில் புதைகுழி உண்டானதாகத் தேசிய தண்ணீர் அமைப்பான பியூபி ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
புதைகுழி ஏற்பட்டதை அடுத்து சாலையின் இரு தடங்கள் பாதிக்கப்பட்டன. புதைகுழியில் கார் ஒன்று விழுந்ததாக பியூபி குறிப்பிட்டது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளால் மீட்கப்பட்ட பெண் ஓட்டுநர் ஒருவர் சுயநினைவுடன் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
“காவல்துறை, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் நிலைமையைச் சரிசெய்யும் முயற்சியில் உள்ளனர்,” என்று பியுபி சொன்னது.
இரு திசைகளிலிருந்து வரும் போக்குவரத்துக்குச் சாலை மூடப்பட்டதை அடுத்து மாற்று வழிகளில் செல்லும்படி அதிகாரிகள் வாகனமோட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.
புதைகுழி உண்டானது குறித்து தமக்கும் தமது குழுவுக்கும் தகவல் கிடைத்ததாக மரின் பரேட்-பிரேடல் ஹைய்ட்ஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ பெய் மிங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் சனிக்கிழமை (ஜூலை 26) பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுத்ததாகக் கூறிய சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள், ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு ஒருவரைக் கொண்டுசென்றனர்.
சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளி, சாலையில் ஒரு புதைகுழி இருப்பதைக் காண்பிக்கிறது. புதைகுழியில் விழுந்த கார் ஒன்று நீரில் மிதப்பதையும் அதில் காண முடிகிறது.
புதைகுழி ஏற்பட்ட இடத்திற்கு அருகே ஒரு கட்டுமானத் தளம் உள்ளது.
இதனிடையே, சாலைப் பணிகள் காரணமாக தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத்திலும், மரின் பரேட் ரோட்டை நோக்கிச் செல்லும் ஆம்பர் ரோட்டிலும் உள்ள நான்கு பேருந்து நிறுத்தங்களைப் பேருந்து எண் 48 தவிர்க்கும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் தனது எக்ஸ் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளது.

