சிங்கப்பூருக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கையில் கணிசமான மாற்றம் எதுவும் இல்லை என்று கடல்துறை, துறைமுக ஆணையம் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) தெரிவித்திருக்கிறது.
மத்திய கிழக்குப் பூசலின் காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களைக் கையாள ஏதேனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று பிஸ்னஸ் டைம்ஸ் கேட்டிருந்தது. கப்பல்கள் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையில் வந்தாலோ கப்பல்களுக்கான எண்ணெய்ப் பற்றாக்குறை ஏற்பட்டாலோ என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ஆணையம் பதில் தந்தது.
சிங்கப்பூரின் கப்பல்களுக்கான எரிபொருள் பல்வேறு இடங்களிலிருந்து வருவதாக ஆணையம் சொன்னது. தேவையை நிறைவேற்றுவதற்குப் போதிய அளவு இருப்பு உள்ளதாக அது குறிப்பிட்டது.
ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டிருப்பதால் கப்பல்களுக்கான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையுடனும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுடனும் சேர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாக ஆணையம் குறிப்பிட்டது.
ஆசியாவில் எண்ணெய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. சில கப்பல்கள் எரிபொருளை நிரப்புவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றன.
ஆசியாவைப் பொறுத்தவரை, சிங்கப்பூர், மலேசியாவின் தஞ்சோங் பெலப்பாஸ், கிள்ளான் உள்ளிட்ட துறைமுகங்கள் நெருக்கடியை எதிர்நோக்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும் கப்பல்களும் கொள்கலன்களும் அதிக எண்ணிக்கையில் குவியக்கூடும் என்பதே அதற்குக் காரணம்.
இந்நிலையில் போரால் ஏற்பட்டுள்ள இடையூறுகளைச் சமாளிக்க, துறைமுக நடவடிக்கைகளைப் பாதுகாப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் கூறியுள்ளார்.

