நிச்சயமற்ற சூழலைக் கடப்பதற்கு மீள்திறனும் மறுபுத்தாக்கமும் மட்டும் போதாது. அதற்குக் கூட்டுறவும் ஒட்டுமொத்த மக்களின் துணிவும் தேவைப்படுவதாக மலேசியாவின் துணை மாமன்னரும் பேராக் மாநில மன்னருமான நஸ்ரின் ஷா தெரிவித்திருக்கிறார்.
நம்பிக்கையை மீண்டும் கட்டமைப்பது, சமத்துவத்திற்கு முன்னுரிமை தருவது, பன்முகத்தன்மையை அரவணைப்பது, துணிச்சலுடன் யோசிப்பது ஆகியவை நிச்சியமின்மையைக் கடக்க வழிகாட்டும் நான்கு நெறிமுறைகள் என்று அவர் கூறினார்.
‘நிச்சயமின்மையைக் கடந்து செல்லுதல்’ என்று தலைப்பில் ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெறும் ஒன்றுபட்ட சமுதாயத்திற்கான அனைத்துலக மாநாட்டின் இரண்டாம் நாளான புதன்கிழமை (ஜூன் 25) பேசியபோது சுல்தான் நஸ்ரின் ஷா இதனைத் தெரிவித்தார்.
இந்த வருடாந்தர மாநாடு மூன்றாவது முறையாக நடைபெறுகிறது.
சமுதாயத்தில் ஏற்படும் மின்னிலக்க உருமாற்றம், மனிதப் புலம்பெயர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம், உலகமயமாதலின் சமநிலையற்ற தாக்கம் ஆகியவை நிச்சியமின்மையை அதிகரிப்பதாகவும் சுல்தான் நஸ்ரின் ஷா தெரிவித்தார்.
இத்தகைய நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் நன்கு பழக்கப்பட்டவை நமக்கு வஞ்சகமான இதம் தருவதாக அவர் குறிப்பிட்டார்.
“மேலும் குறுகலான அடையாள வட்டத்திற்குள் நாம் செல்வதற்கான ஆசை ஏற்படலாம். நமக்கே சில சலுகைகளைச் சேகரித்து, இல்லாத இறந்த காலத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
ஆனால், நிச்சியமின்மைக்கான பதில், பின்வாங்குதலில் இல்லை என்று பேராக் மாநில ஆட்சியாளராகவும் செயல்படும் சுல்தான் நஸ்ரின் ஷா தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“சமூக ஒப்பந்தத்தின்மீது நாம் மீண்டும் முதலீடு செய்யவேண்டும். வெளிப்படைத்தன்மையான தேசிய அமைப்புகள், விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ள தலைமைத்துவம், மக்களின் கருத்துகள் கேட்கப்படும் சமூக வெளி ஆகியவை தேவைப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.
கொள்கை வகுப்பின் மையத்தில் சமூக, பொருளியல், சுற்றுச்சூழல் நீதி இருக்கவேண்டும் என்று சுல்தான் நஸ்ரின் ஷா குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் தொடங்கியுள்ள இந்த மாநாடு, எஸ்.ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுக்கான பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.