‘சிடிசி’ பற்றுச்சீட்டுகள் தொடர்பில் சலுகைகளை அறிவித்துள்ள பேரங்காடிகள்

2 mins read
3a9746fc-3a55-4638-9d2f-caccb86da2c7
சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளின் பயன்பாட்டைக் குடும்பங்களிடையே ஊக்குவிக்கும் வகையில் பேரங்காடிகள் சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளன. - படம்: எஸ்பிஎச் மீடியா லிமிடெட்

சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளின் பயன்பாட்டைக் குடும்பங்களிடையே ஊக்குவிக்கும் வகையிலும் அரசாங்கத்தின் முயற்சிக்கு மேலும் நிறைவு சேர்க்கவும் இங்குள்ள பேரங்காடிகள் சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளன.

வழக்கம்போல இந்த ஆண்டு வழங்கப்படும் $300 மதிப்பிலான ‘சிடிசி‘ பற்றுச்சீட்டுகளிலும் 150 வெள்ளியைக் குடியிருப்பு வட்டார வணிகங்கள், உணவங்காடிகளிலும் எஞ்சியுள்ள 150 வெள்ளியை இத்திட்டத்தில் பங்கேற்கும் பேரங்காடிகளிலும் சிங்கப்பூரர்கள் பயன்படுத்தலாம்.

ஜனவரி 3 முதல் 9 வரை, அனைத்து ‘ஜயன்ட்’ பேரங்காடிகளிலும் ‘சிடிசி‘ அல்லது ‘எஸ்ஜி60‘ பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்திக் குறைந்தபட்சம் $60 செலவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு $6 மதிப்பிலான ‘ரிட்டர்ன் பற்றுச்சீட்டு’ வழங்கப்படும் என்றும் அதனை இம்மாதம் 4 முதல் 18 வரை எவ்விதக் குறைந்தபட்ச செலவு வரம்புமின்றிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இம்மாதம் 2 முதல் 11 வரை, ஃபேர்பிரைஸ், ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட்,  ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா உள்ளிட்ட எந்தவொரு ‘ஃபேர்பிரைஸ்‘ பேரங்காடியிலும், ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி ஒரே பரிவர்த்தனையில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு 60 வெள்ளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு $6 மதிப்பிலான ‘ரிட்டர்ன்’ பற்றுச்சீட்டுச் சலுகை கிடைக்கவுள்ளது.

இதுகுறித்துக் கருத்துரைத்த ‘ஃபேர்பிரைஸ்’ குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் சாவ்லா, “குடும்பங்கள் புத்தாண்டைத் தொடங்கும் இவ்வேளையில், இந்தச் சலுகைப் பற்றுச்சீட்டுகள் அவர்களுக்கு ஓரளவு ஆதரவாக அமையும். அவர்களின் அன்றாடச் செலவுகளின் சுமையைக் குறைக்க இது உதவும் என்று நம்புகிறோம்,” என்றார். 

மேலும், மற்றொரு பேரங்காடியான ஷெங் சியோங் நிறுவனம், ‘சிடிசி‘ பற்றுச்சீட்டுகள் தொடர்பில் குறிப்பிட்ட தள்ளுபடிகள் எதையும் வழங்கவில்லை என்று கூறியது. இருப்பினும், மூத்தோர்களுக்கான தனது தற்போதைய 4 விழுக்காட்டுத் தள்ளுபடியை டிசம்பர் 31, 2026 வரை நீட்டித்துள்ளதாக அது குறிப்பிட்டது. 

குறிப்புச் சொற்கள்