உயரத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மேற்பார்வையாளர் ஒருவருக்கு ஜூலை 11ஆம் தேதி ஏழு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரின் கவனக்குறைவால், சாயம் பூசிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் உயரத்திலிருந்து விழுந்து மரணமடைந்தார்.
வழியில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று, அந்த ஊழியரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த கயிற்றில் சிக்கியதால், ஊழியர் விழுந்தார்.
இந்தியாவைச் சேர்ந்த 36 வயது ராமு கோபிநாத் மீது வேலையிடப் பாதுகாப்புச் சுகாதாரச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
வாகனங்களுக்கு வழிகாட்ட ஒருவர் தரையில் இருப்பதை உறுதிசெய்ய அவர் தவறிவிட்டார்.
‘ராயல் பிளாஸா ஒன் ஸ்கோட்ஸ்’ ஹோட்டலுக்கு வெளியே உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்த திரு சுந்தர்ராஜன் மாணிக்கராஜாவைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த கயிற்றில் எந்தவொரு வாகனமும் மோதுவதைத் தவிர்க்க, ஒருவர் தரையில் பணியில் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும்.
உயிரிழந்தவர், 2019ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி ஹோட்டல் கட்டடத்தின் வெளிப்புறத்தில் சாயம் பூசிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கோபிநாத் ‘சிகேஆர் கான்ட்ராக்ட் சர்விசஸ்’ நிறுவனத்திற்குப் பணிபுரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
விபத்து நடந்த நாளன்று, ஊழியர் ஒருவர் வாகனங்களுக்கு வழிகாட்டும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். ஆனால் கோபிநாத் அவரைத் தொடர்புகொண்டபோது அவர் பதில் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தரையில் வாகனங்களுக்கு வழிகாட்டும் ஊழியர் இல்லாதபோதும், கோபிநாத் உயிரிழந்த ஊழியரையும் மற்றோர் ஊழியரையும் கட்டடத்தின் கூரையிலிருந்து இறங்கும்படிச் சொன்னார்.
இரண்டு ஊழியர்களும் கூரையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தபோது, வழியில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றின் கண்ணாடி திரு சுந்தர்ராஜன் மாணிக்கராஜாவைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த கயிற்றுடன் சிக்கியது.
அவர் 62 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து மரணமடைந்தார்.

