தொலைபேசி, குறுஞ்செய்தி, இணையம், செய்தித் தளங்கள் வழி 18 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு மது விநியோகிப்பது 2024 ஜனவரி 2 முதல் குற்றமாகும்.
மது உரிமம் பெற்றவர் அல்லது அவரது ஊழியர், இணையம் மூலமாக 18 வயதுக்குட்பட்டோருக்கு எவ்வித மதுவையும் விநியோகிக்கக்கூடாது என்று புதிய விதிமுறை தெரிவிக்கின்றது.
வர்த்தகர்கள், மின்வர்த்தகத் தளங்கள், பொதுமக்கள், ஷாப்பி, கிராப் ஃபுட் போன்ற இணைய சேவைகள் அல்லது தொலைத்தொடர்பு சேவைகளைப் பயன்படுத்தி மது விற்பனை செய்வதற்கு உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தொலைத்தொடர்பு சேவைகள் என்பது தொலைபேசி, குறுஞ்செய்தி, இணையத்தை அடிப்படையாகக்கொண்ட செய்தி அனுப்பும் சேவைகளான வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகியவற்றைக் குறிக்கும்.
விநியோகிப்பாளர்களும், மின்வர்த்தகத் தளங்களில் விற்பனை செய்வோர்களும் மது வாங்குவோரின் வயதை உறுதிசெய்ய வேண்டும். 18 வயதுக்குட்பட்டவர் மது வாங்குவது குற்றம் என்பதை அவர்களுக்கு விளக்கி அதற்கான தண்டனையையும் தெரிவிக்கவேண்டும். குற்றவாளிகளுக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படும். இச்சட்டம் மூன்றாமவராக, (வாங்குவோருக்கும் விற்பனை செய்வோருக்கும்) இடைத்தரகர்களாகச் செயல்படுவோருக்கும் பொருந்தும்.
உள்துறை அமைச்சும் காவல்துறையும் செய்த ஒழுங்குமுறைத் தேவைகளின் மறுஆய்வுக்குப் பிறகு, மதுக் கட்டுப்பாடு (விநியோகம் மற்றும் நுகர்வு) (மது உரிமம்) சட்டம் 2015ல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை காவல் துறை சனிக்கிழமை (நவம்பர் 18) அறிவித்தது.
மறுஆய்வின் ஓர் அங்கமாக, 2024ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் உரிமம் பெற்றவர்கள் உரிமம் பெற்ற இடங்களில் மதுபானங்களை வைத்திருக்கவோ, சேமிக்கவோ வேண்டியதில்லை. ஆயினும் அவ்வாறு வைக்கவோ, சேமிக்கவோ பயன்படுத்தும் இடங்களில் இருந்து மதுபானம் விற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.