வேலைக்குத் திரும்பும் பொங்கோல் வட்டாரப் பெண்களுக்குக் கூடுதல் உதவி காத்திருக்கிறது.
வீட்டுக்கு அருகிலுள்ள வேலைகளையும் நீக்குப்போக்கு ஏற்பாடுகளைக் கொண்ட வேலைகளையும் பெற அவர்களுக்கு உதவுவது உள்ளிட்டவை இத்தகைய உதவிகளில் அடங்கும்.
வேலைக்குத் திரும்ப விரும்பும் பெண்களுக்கு உதவி செய்வதில் தங்கள் தொகுதியிலுள்ள மக்கள் செயல் கட்சியின் மகளிர் நல ஆர்வலர்கள் முக்கியமாக கவனம் செலுத்தி வருவதாக பாசிர் ரிஸ்- பொங்கோல் வட்டார நாடாளுமன்ற உறுப்பினர் இயோ வான் லிங் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 30) பொங்கோல் பிளாசாவிலுள்ள கோஃபூ உணவு நிலையத்தில் அனைத்துலகப் பெண்கள் தினத்திற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் திருவாட்டி இயோ செய்தியாளர்களிடம் பேசியபோது அவ்வாறு கூறினார்.
நீக்குப்போக்கு, நல்ல வளர்ச்சி வாய்ப்பு, பெண்கள் மீண்டும் திரும்புவதற்கு நிறுவனம் தரும் நல்லாதரவு ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ள வேலை வெற்றியைத் தரக்கூடியது என்று அவர் கூறினார்.
“முக்கியமாக அந்த வேலையில் நல்ல சம்பளம் வழங்கப்படவேண்டும். இவற்றுக்காக இங்குள்ள மகளிர் நல ஆர்வலர்கள் என்னுடன் போராடி வருகிறார்கள்,” என்றார் திருவாட்டி இயோ.
என்டியுசியின் “சியு பெக் டு வர்க்” (CU Back at Work) திட்டத்தின்கீழ் , சாய் தியாம் மெயின்டனன்ஸ் என்ற கட்டட, சுற்றுப்புற நிர்வாக நிறுவனத்தில் நீக்குப்போக்கு ஏற்பாடுகளைக் கொண்டுள்ள வேலைகள் இதுவரையில் கிட்டத்தட்ட 200 பெண்களுக்குக் கிடைத்துள்ளன.
பொங்கோலுக்கு அருகிலுள்ள தெம்பனீஸ் இன்டஸ்ட்ரீயல் டிரைவ்வில் சாய் தியாமின் அலுவலகங்கள் உள்ளன.

