சிக்கலும் பிரச்சினைகளும் அதிகரித்து வரும் உலகில் சிங்கப்பூர் நிறுவனங்கள் உலக அரங்கில் போட்டித்தன்மையுடன் நீடிக்கத் தேவையான வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு அரசாங்கம் உறுதுணை புரியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வர்த்தகம், மூலதனம், திறன் மற்றும் செழித்தோங்கத் தேவையான ஆற்றல்களை உள்ளூர் நிறுவனங்கள் பெறவும் அரசாங்கம் உதவி செய்யும்.
செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதும் பசுமைப் பொருளியலிலும் மின்னிலக்கப் பொருளியலிலும் உருவாகி வரும் சந்தைகளை கவனத்தில் கொள்வதும் புதிய வாய்ப்புகளில் அடங்கும்.
சிங்கப்பூரின் பொருளியல் திட்டங்களைப் புதுப்பிக்கத் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை வர்த்தக, தொழில் அமைச்சு, மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம், பிரதமர் அலுவலகத்தின்கீழ் செயல்படும் தேசிய ஆய்வு அறநிறுவனம் ஆகியன செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 16) அறிவித்தன.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய தொடக்க உரையின் பிற்சேர்க்கையில் அந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
நாட்டின் செழிப்பைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு சிங்கப்பூர் குடிமகனையும் முன்னேற்றக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை திரு தர்மன் தமது உரையில் வலியுறுத்தி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு பிற்சேர்க்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
வர்த்தக, தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள பிற்சேர்க்கையில், முன்னணி நிறுவனங்களின் இருப்பிடமாகவும் உலகின் முக்கிய வர்த்தக மையமாகவும் சிங்கப்பூரை தமது அமைச்சு நிலைநிறுத்தும் என்று தெரிவித்து உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், வளர்ச்சியைப் பேணவும் வேலைகளை உருவாக்கவும் உலகப் பொருளியலுடனான முக்கியதொரு இணைப்பாகவும் சிங்கப்பூர் விளங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றது அமைச்சு.
உலகின் முன்னணி நிறுவனங்களைக் கவரும் முயற்சிகளைத் தொடரும் அதேவேளை உள்ளூர் நிறுவனங்கள் அனைத்துலக அளவிலும் வட்டார அளவிலும் வளர உதவிகள் செய்யப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.
மனிதவள அமைச்சு தனது பிற்சேர்க்கையில், பரந்து விரிந்த செயற்கை நுண்ணறிவுக் கல்வியைப் பெற பொருளியல் உத்தி மறுஆய்வு மற்றும் தேசிய செயற்கை நுண்ணறிவு உத்தி மூலம் ஆதரவு வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், நிறுவனங்கள் தங்கள் வசம் உள்ள ஊழியர்களை மாற்றாமல் அவர்களைக் கொண்டே உருமாறத் தேவையான உதவிகளும் வழங்கப்படும் என்றது அமைச்சு.
சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்டுள்ள பிற்சேர்க்கையில், பொருளியல் நிலவரம் எதிர்பாராத பலவீனத்தைச் சந்திக்கும் போது அதனைச் சமாளிக்கும் வகையில் பொருத்தமான நேரத்தில், பொருத்தமான நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும் என்றது.
நிதித்துறையுடன் இணைந்து இதர ஆதரவு நடவடிக்கைகளையும் மேற்கொள்வது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்க விகிதம் இறங்குமுகத்தில் நீடிப்பதற்கு ஏற்ப இவ்வாண்டில் நாணயக் கொள்கை இருமுறை தளர்த்தப்பட்டதையும் ஆணையம் தனது பிற்சேர்க்கையில் நினைவுகூர்ந்துள்ளது.
தேசிய ஆய்வு அறநிறுவனம் தனது பிற்சேர்க்கையில், சிங்கப்பூரின் போட்டித்தன்மையை மேம்படுத்தக்கூடிய புத்தாக்கம் மற்றும் நிறுவனம் (RIE) என்னும் திட்டத்தின் அடிப்படையில் வலுவான ஆராய்ச்சி நிபுணத்துவம் மற்றும் துடிப்பான ஆராய்ச்சி முறையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் ‘புத்தாக்கம் மற்றும் நிறுவனம்’ திட்டத்திற்கு ஐந்தாண்டுகளில் $28 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை அது தனது பிற்சேர்க்கையில் குறிப்பிட்டுள்ளது.