பொங்கோல் பலதுறை மருந்தகத்தில் இளம் குடும்பங்களுக்கு ஆதரவுத் திட்டம்

பொங்கோல் பலதுறை மருந்தகத்தில் இளம் குடும்பங்களுக்கு ஆதரவுத் திட்டம்

2 mins read
aac0bb56-ea19-4900-b467-d4906c0f8423
பொங்கோல் பலதுறை மருந்தகத்தில் தொடங்கப்பட்டுள்ள ஃபேமிலி நெக்சஸ்@பொங்கோல் வளாகத்தில் காணப்படும் ஓர் இளம் குடும்பம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சுகாதாரம், சமூக சேவை ஆகிய இரண்டையும் பற்றி ஒரேநேரத்தில் இளம் குடும்பங்களுக்கு எளிதில் தகவல் தெரிவிக்கும் முயற்சியாக ‘ஃபேமிலி நெக்சஸ்@பொங்கோல்’ திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் முன்னெடுத்துள்ள இத்திட்டத்தை சிங்ஹெல்த் பலதுறை மருந்தகம் - பொங்கோல் மேற்கொண்டுள்ளது.

முன்னதாக, பிள்ளையின் மனநலச் சுகாதாரம் குறித்தோ விளையாட்டு மூலம் பிள்ளைகளுக்கு வழிகாட்டுவது குறித்தோ அனைத்து குழந்தை வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பில் பெற்றோர்கள் தாங்களே தகவல் தேடிக்கொள்ளும் நிலைமை இருந்தது.

தங்களுக்கு மேலும் அதிகமான சமூக வளங்களும் ஆதரவும் தேவைப்படுவதாகப் பெற்றோர்களும் தம்பதிகளும் கருத்து தெரிவித்ததை அடுத்து சுகாதார அமைச்சு இத்திட்டத்தை வகுத்தது.

பொங்கோலில் மேற்கொள்ளப்படும் இந்த முன்னோடித் திட்டம், தேவையான சமூக சேவைகளையும் திட்டங்களையும் மக்கள் பலதுறை மருந்தகத்தில் இருக்கும் சமயத்தில் பெற்றுக்கொள்ள வகைசெய்யும்.

தாய்மார், தாய்மை அடைய உள்ளோர் ஆகியோரது மனநலம் மற்றும் நல்வாழ்வு, குழந்தை சுகாதாரம் மற்றும் மேம்பாடு, திருமணம், குழந்தை வளர்ப்பு ஆகியவற்றைக் குறித்து ஆலோசனையும் ஆதரவும் பெற முடியும்.

தெம்பனிஸ், சுவா சூ காங், செம்பவாங் பலதுறை மருந்தகங்களிலும் இதுபோன்ற திட்டங்கள் நடப்பில் உள்ளன.

ஃபேமிலி நெக்சஸ்@பொங்கோல் திட்டத்தைத் தொங்கிவைத்துப் பேசினார் சுகாதார மற்றும் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி.
ஃபேமிலி நெக்சஸ்@பொங்கோல் திட்டத்தைத் தொங்கிவைத்துப் பேசினார் சுகாதார மற்றும் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஃபேமிலி நெக்சஸ்@பொங்கோல் திட்டத்தின் துவக்க விழாவில் கலந்துகொண்ட சுகாதார மற்றும் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி திட்டம் குறித்து பேசினார்.

“பொங்கோல், வடகிழக்கு வட்டாரங்களில் இளம் பிள்ளைகள் உள்ள குடும்பங்கள் சுகாதார, குழந்தை வளர்ப்புச் சேவைகளை இனி எளிதில் நாடி வருவர் என்று நம்புகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

குழந்தை வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பில் பெற்றோருக்கு டிசம்பர் 2023 முதல் 190க்கு மேற்பட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்