இளையோரிடையே மேலும் ஆரோக்கியமான, பாதுகாப்பான சமூக ஊடகப் பயன்பாட்டை ஆதரிக்க, சமூக ஊடகப் பயன்பாட்டின் மனநலத் தாக்கம் குறித்த நிபுணர்க் குழு அதன் கண்டுபிடிப்புகளையும் பரிந்துரைகளையும் கொண்ட அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது.
அந்த நிபுணர்க் குழுவைச் சுகாதார அமைச்சு 2025ஆம் ஆண்டு செப்டம்பரில் அமைத்தது. இளையோரின் மனநலத்தில் சமூக ஊடகப் பயன்பாடு ஏற்படுத்தும் தாக்கத்தின் தொடர்பில் உள்ள தற்போதைய ஆதாரங்களை ஆராய அந்தக் குழு தொடங்கப்பட்டது.
இளையோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் நேரம், அவர்கள் பார்க்கும் விஷயங்கள் மட்டுமன்றி, அவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதும் அவர்களைப் பாதிப்பதாக நிபுணர்க் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பயன்பாட்டு முறைகளைத் தாண்டி, இளையோரின் மனநலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சில குறிப்பிட்ட அம்சங்களையும் நிபுணர்க் குழு அடையாளம் கண்டுள்ளது.
பயனர்களுக்குப் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள்
நேரடிச் செய்தி அனுப்பும் அம்சங்கள், இளையோருக்கு இணையவழித் தொல்லை, தெரியாத நபர்களிடமிருந்து வரும் முறையற்ற தொடர்புகள் போன்ற பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும். அடையாளத்தை வெளிப்படுத்தாத அல்லது போலிக் கணக்குகளைப் பயன்படுத்துவது, பொறுப்புணர்வைக் குறைப்பதுடன், தீங்கிழைக்கும் இணையவழி நடத்தைகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதையும் மேலும் கடினமாக்குகிறது.
மனநலப் பாதிப்புகளை மேலும் மோசமாக்கக்கூடிய அம்சங்கள்
மன உளைச்சலைத் தரும் அல்லது உணர்ச்சிகளைத் தூண்டும் உள்ளடக்கங்கள் அதிகப் பார்வைகளைப் பெறுவதால், பயனரின் ஆரம்பகட்டத் தேடல் சாதாரணமானதாக இருந்தாலும், பரிந்துரைக்கப்படும் படிமுறைகள் (algorithms) அவர்களை ஆபத்தான உள்ளடக்கங்களுக்குள் கொண்டுசேர்த்துவிடும்.
‘லைக்ஸ்’ (likes), ‘ஃபோலோவர்ஸ்’ (followers) போன்ற சமூகக் கருத்துப் பகிர்வு அம்சங்கள், பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் மனப்பான்மையையும் மற்றவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் நடத்தையையும் தூண்டுகின்றன.
தற்போதுள்ள பொதுக் கல்வி விழிப்புணர்வு முயற்சிகள்
இளையோரிடையே பாதுகாப்பான, ஆரோக்கியமான சமூக ஊடகப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, சிங்கப்பூர் பல்வேறு ஒழுங்குமுறை, பொதுக் கல்வி நடவடிக்கைகளைப் படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
‘இணையப் பாதுகாப்பிற்கான நடைமுறைக் கோட்பாடு - சமூக ஊடகச் சேவைகள்’ விதியின்படி, குறிப்பிட்ட சமூக ஊடகச் சேவைகள் சிங்கப்பூர் பயனர்களுக்கு, முக்கியமாகக் குழந்தைகளுக்குத் தீங்கான இணைய உள்ளடக்கங்கள் காட்டப்படுவதைக் குறைப்பதற்கான செயல்முறைகளை நடைமுறைப்படுத்தவேண்டும்.
ஒழுங்குமுறை நடவடிக்கைகளைத் தாண்டி, இளம் பயனர்களிடையே ஆரோக்கியமான மின்னிலக்கப் பழக்கவழக்கங்களை வளர்க்க, அரசாங்கம் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இளம் பயனர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் முன்னெச்சரிக்கையான, முன்கூட்டியே திட்டமிட்ட அணுகுமுறை கையாளப்படவேண்டும் என்று நிபுணர்க் குழு பரிந்துரைத்துள்ளது.
அதோடு, இளையோர் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, தீங்கிழைக்கக்கூடிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்பது முன்வைக்கப்பட்ட மற்ற பரிந்துரைகளில் ஒன்று.
இளையோரின் மனநலனுக்கான ஆதரவை வலுப்படுத்துவதற்கும் பாதுகாப்பான மின்னிலக்க அனுபவங்களை ஊக்குவிப்பதற்குமான தற்போதைய முயற்சிகளுக்கு நிபுணர்க் குழுவின் கண்டுபிடிப்புகளும் பரிந்துரைகளும் வழிகாட்டியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

