பெண்களுக்கு இன்னும் சிறந்த வேலையிடச் சூழலை உருவாக்க ஆதரவு: சிம் ஆன்

பெண்களுக்கு இன்னும் சிறந்த வேலையிடச் சூழலை உருவாக்க ஆதரவு: சிம் ஆன்

2 mins read
65c9c8a5-2fc4-4566-9152-5e4ca601e26b
தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் மகளிர், குடும்ப அமைப்பு ஏற்பாடு செய்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் ‘ஒன்-பொட் வன்டர்ஸ்’ (One-Pot Wonders) என்ற சமையல் குறிப்பு நூல் வெளியிட்டது. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் உள்ள பெண்களுக்கு இன்னும் சிறந்த வேலையிடச் சூழலை அமைத்துத் தர தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் தொடர்ந்து முயற்சி செய்யும் என்று மக்கள் கழக பெண்கள் பிரிவுத் தலைவர் சிம் ஆன் கூறியுள்ளார்.

தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) ஏற்பாடு செய்த மகளிர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட வெளியுறவு மூத்த துணையமைச்சருமான திருவாட்டி சிம், பொருளியல், பராமரிப்பு, பொது வாழ்க்கை ஆகிய துறைகளில் பெண்களின் பங்களிப்பை முழுமையாக ஆதரிக்கும் சமூகத்தை உருவாக்குவது பொதுவான இலக்கு என்று குறிப்பிட்டார்.

கூடுதலான வேலையிடங்கள், நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை அனுமதிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்ற திருவாட்டி சிம், அனுபவம் வாய்ந்த ஊழியர்களை நீண்டகாலத்துக்குத் தக்கவைக்க முதலாளிகள் எடுக்கும் முயற்சியை இது வெளிப்படுத்துவதாகக் கூறினார்.

தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் மகளிர், குடும்ப அமைப்பு ஏற்பாடு செய்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் ‘ஒன்-பாட் வொன்டர்ஸ்’ (One-Pot Wonders) என்ற சமையல் குறிப்பு நூல் வெளியிடப்பட்டது.

தொழிற்சங்கத் தலைவர்களும் ஆலோசகர்களும் 25 ஆரோக்கியமான சமையல் குறிப்புகளை அதில் வழங்கியுள்ளனர். நிகழ்ச்சியில் 1,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினராகக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைவர் கே தனலட்சுமி, “பெண்களுக்கு வழங்கப்படும் ஆதரவு நடைமுறைக்கு ஏற்ப இருக்கவேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

எனவேதான் இவ்வாண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருள் “மீல்ஸ் தெட் மல்டிடாஸ்ட்க்- லைக் விமன் டு’ (Meals That Multitask – Like Women Do) என்ற அவர், பெண்கள் எதிர்கொள்ளும் காண முடியாத மன ரீதியான சுமையை அது வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

சமையல் குறிப்பு நூலின் மூலம் அன்றாட வாழ்க்கையில் வேலையையும் வீட்டையும் பார்த்துக்கொள்ளும் பெண்கள் பயனடைவர் என்று நம்புவதாகத் திருவாட்டி தனலட்சுமி சொன்னார்.

வேலையையும் பார்த்துக்கொண்டு பராமரிப்பாளர் பொறுப்பையும் ஒருசேர சுமக்கும் 100க்கும் அதிகமான பெண்களைத் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பாராட்டியது.

மீள்திறனுடன் திகழும் அந்தப் பெண்கள் மீள்திறன்மிக்க பெண் தூதர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

ஆரோக்கிய சமையலை வலியுறுத்தும் வகையில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏர் ஃபிரையர் (air fryer) சாதனங்கள் வழங்கப்பட்டன. அவர்களின் சமையல் குறிப்புகள் இனிவரும் ஆண்டுகளில் வெளியிடப்படும் நூல்களில் இடம்பெறும்.

குறிப்புச் சொற்கள்