புற்றுநோய் ஆய்வில் கேரளப் பூர்வீகம் கொண்ட அறுவை சிகிச்சை நிபுணர்

புற்றுநோய் ஆய்வில் கேரளப் பூர்வீகம் கொண்ட அறுவை சிகிச்சை நிபுணர்

3 mins read
a69d48e7-fc99-4db5-99af-fae9886e4b46
சிங்கப்பூரில் புற்றுநோய் குறித்த மிக முக்கிய ஆய்வுகளில் ஒன்றுக்குத் தலைமைதாங்கும் டாக்டர் கிளென் போனி. - படம்: கிளென் போனி
multi-img1 of 2

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் கிளென் போனி மருத்துவத் துறைக்கு பெருஞ்சவாலாக அமைந்த புற்றுநோய்க்கு எதிராகப் போராடிவருகிறார்.

உலகிலேயே மிகவும் சிக்கலான கணையம் சார்ந்த அறுவை சிகிச்சைகளை அவர் ஒவ்வொரு வாரமும் மேற்கொள்கிறார். மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சைகள் எவ்வளவோ மேம்பட்டிருந்தாலும் பல நோயாளிகள் அதே புற்றுநோய்ப் பிரச்சினையை சில ஆண்டுகளில் மீண்டும் எதிர்நோக்குகின்றனர்.

‘ஃபவுன்டேஷன் ஹெல்த்கேர்’ அமைப்பின் ‘பான்ஏஷியா சர்ஜரி’ குழுமத்தில் கல்லீரல், கணைய உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் கிளென் போனி கடந்த பத்து ஆண்டுகளாக பற்பல ஆய்வுகள் வழியாகப் புற்றுநோய்க்கான தீர்வுகளைத் தேடிவருகிறார்.

அதன்பயனாக சிங்கப்பூரின் மிகவும் முக்கியமான நம்பிக்கையளிக்கும் ஆய்வுகளில் ஒன்றை அவர் தலைமை ஏற்று வழிநடத்திவருகிறார்.

அவர் வடிவமைத்துள்ள அடுத்த தலைமுறைக்கான தடுப்பூசி சிகிச்சை முறையின்படி, ஒருவரின் உடலில் இயங்கும் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் கணைய புற்றுநோயைத் தானாக அடையாளம் கண்டு அழிக்க உதவும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

ஆய்வில் கண்டறியப்பட்ட தடுப்பூசி சார்ந்த அறிவியலுக்கு என்யுஎஸ்ஸின் இணைப்பேராசிரியர் லெ தி ஙூயெட் மின் தலைமை ஏற்றார். அத்தடுப்பூசியின் ஊக்கமளிக்கும் முடிவுகள் மருத்துவ முறைகளுக்கு முந்தைய ஆய்வுக் கட்டுரைகளில் வெளியிடப்பட்டன. அவை அடுத்த 12 முதல் 18 மாதங்களில் முதன்முறையாக மனிதர்களிடம் சோதிக்கப்படவுள்ளன.

“கணையப் புற்றுநோயை மிகவும் சிரமப்பட்டு பராமரிக்கவேண்டியுள்ளது,” என்று தப்லா வாரஇதழுக்கு வழங்கிய பேட்டியில் டாக்டர் போனி விளக்கினார். மிகவும் மெதுவாக அப்புற்றுநோய் பரவுவதால் அதனை எளிதில் கண்டறியமுடியாது என்றார் அவர். நோயாளியிடம் அது பிறகு கண்டறியப்பட்டாலும் உடலின் நோய்த் தடுப்பு அரண்களை அது தவிர்ப்பதில் திறன் வாய்ந்தவையாக இயங்குகின்றன.

சிங்கப்பூரின் மருத்துவத் துறை முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கும் வேளையில் இந்த ஆய்வு நடந்துவருகிறது. அனைத்துலக அளவில் மேற்கொள்ளப்பட்ட பல அண்மைய ஆய்வுகளில் குடியரசில் கணையப் புற்றுநோய் விகிதம் ஆண்களிலும் பெண்களிலும் உலகிலேயே மிக வேகமாகப் பரவிவருவதாக அறியப்பட்டுள்ளது. அது ஏன் என்பதை அறிய ஆய்வாளர்கள் முற்பட்டுவந்தாலும் நிரழிவு நோய், கொழுப்பு நிறைந்த கணையம் ஆகியன அதற்கான காரணங்களாக அமையலாம் என்று டாக்டர் போனி தெரிவித்தார்.

அதைவிடக் கவலையளிக்கும் செய்தி என்னவென்றால் கணையப் புற்றுநோயின் அனைத்துக் கட்டங்களும் ஆபத்தானதே. அதனை ஆரம்பத்திலேயே கண்டறிவதால் அதனை முற்றிலும் தடுக்கமுடியும் என்பதில்லை.

வயிற்றுப் பகுதியின் உட்புறம் கணையம் ஆழமாக மறைந்து இருப்பதும் அதில் புற்றுநோய்க் கட்டிகள் உருவெடுத்தபின்புதான் அவற்றைக் கண்டறியமுடியும் என்பதும் அதன் ஆபத்துகள். விளக்கமின்றி ஏற்படும் புதியவகை நீரிழிவு, எடைக்குறைவு, விரைவாக ஏற்படும் மஞ்சள் காமாலை போன்றவை அதன் ஆரம்பக்கட்ட அறிகுறிகள். அவற்றை மக்கள் அலட்சியப்படுத்தி நிராகரிக்கக்கூடாது.

கணையப் புற்றுநோயைப் பராமரிப்பது மிகக் கடினமாகும். அதில் 20 விழுக்காடு, புற்றுநோய் உயிரணுக்களைக் கொண்டவை. எஞ்சிய 80 விழுக்காடு அடர்த்தியான ஸ்ட்ரோமா எனப்படும் நார்த்திசுக்கள் நிறைந்தவை. அவை புற்றுநோய் அணுக்களை அரண்போல பாதுகாக்கின்றன. அதனால் பல புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளும் நோய் எதிர்ப்பு உயிரணுக்களும் புற்றுநோயை நெருங்கமுடிவதில்லை.

கணையப்புற்றுநோய்க்கெனத் தடுப்பூசிகள் இல்லை. ஆய்வில் வடிவமைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் நோயாளியின் உடலில் உள்ள நோய்எதிர்ப்புக் கட்டமைப்பை உயிர்த்தெழச் செய்ய உதவும் தன்மையுடவை என்று டாக்டர் போனி கூறினார்.

ஆய்வுக் கூடத்தில் விலங்குகளில் செலுத்தப்பட்ட தடுப்பூசி, புற்றுநோய் வளர்ச்சியைக் குறிப்பிடத்தக்க வகையில் பாதுகாப்பாகக் குறைத்துள்ளது. மனிதர்களில் செலுத்திச் சோதிக்கும் ஆய்வுகள் விரைவில் தொடங்கப்படும் என்ற டாக்டர் போனி, மருத்துவ அமைப்புகளும் அரசாங்கமும் ஆய்வுக்கென நிதி உதவிகள் வழங்கியுள்ளதையும் தெரிவித்தார்.

கேரளப் பூர்வீகம்

டாக்டர் போனியின் தாய்வழி தாத்தா கேரளாவின் பாலக்காட்டில் பிறந்தவர். பத்தொன்பது வயதில் அவர் மும்பைக்குச் சென்று அங்கிருந்து கப்பலில் மலேயா வந்து ரப்பர் தோட்டத்தில் பணியாற்றினார். திருவனந்தபுரத்தில் பிறந்து அங்கு வாழ்ந்த அவரது பாட்டியைச் சந்தித்து அவரது தாத்தா திருமணம் செய்துகொண்டார்.

எனவே தாம் கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதில் பெருமைகொள்வதாக டாக்டர் கிளென் போனி கூறினார்.

குறிப்புச் சொற்கள்