சர்ரே ஹில்ஸ் நிறுவனர் பணியிலிருந்து நீக்கம்

1 mins read
ab928bd9-bc81-4800-acf0-46d31e8a9b44
திருவாட்டி பாங் கெக் டெங் 2021ஆம் ஆண்டில் சர்ரே ஹில்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சர்ரே ஹில்ஸ் குரோசர் வியாபாரத்தை ஒரு கடையிலிருந்து ஐந்து கடைகளாகப் பெருக்கிய அதன் தலைமை நிர்வாக அதிகாரியான திருவாட்டி பாங் கெக் டெங் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 26ஆம் தேதி சர்ரே ஹில்ஸ் நிறுவனம் அவரை பதவியிலிருந்து நீக்கியது.

இது தொடர்பாக மார்ச் 28ஆம் தேதி ஊடகங்களுக்கு அது அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், நிறுவனத்திற்கு எதிராக சில தவறுகளையும் மோசடிகளையும் செய்ததை திருவாட்டி பாங் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவரது தவறுகளின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு அதனால் ஏற்பட்ட இழப்புகளை மதிப்பிடுவதற்கு மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த இடைக்காலத்தில் தலைமை நிர்வாகி பணியை சர்ரே ஹில்ஸ் ஹோல்டிங்சின் இயக்குநர் சபையின் இயக்குநர் திருவாட்டி கோ சிவ் சீ மேற்கொள்வார் என்று அறிக்கை கூறியது.

இந்நிலையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திருவாட்டி பாங், “தற்போதைய சூழ்நிலை மிகுந்த ஏமாற்றமாக இருந்தாலும் எனது சகாக்களும் நானும் இணைந்து சாதித்ததைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்று கூறியுள்ளார். “பலரையும் ஈர்க்கும் அளவுக்கு ஒரு செழிப்பான வணிகத்தை வளர்த்தோம். இந்தப் பயணத்தில் நம்பிக்கை கொண்ட எங்கள் வாடிக்கையாளர்கள், பங்காளிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் அளித்த அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றியுள்ளவளாக இருப்பேன்,” என்றார் திருவாட்டி பாங்.

குறிப்புச் சொற்கள்