சிங்கப்பூரில் பாலர் பள்ளிகளின் பாதுகாப்பு தரநிலை குறித்து கிட்டத்தட்ட 95 விழுக்காடு பெற்றோர்கள் மனநிறைவுடன் இருக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகப் பிள்ளைவதை தொடர்பான புகார்கள் எழுந்துள்ள நிலையில் இந்த முடிவுகளைக் கூறும் கருத்தாய்வு ஒன்று வெளிவந்துள்ளது.
பாலர்பள்ளியின் கல்வி குறித்தும் பாலர்பள்ளிக் கல்வியாளர்களுக்கும் தங்களுக்கும் இடையிலான பங்காளித்துவம் குறித்து மனநிறைவுடன் இருப்பதாகப் பெற்றோர்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு முதன்முதலாக நடத்தியுள்ள பாலர் பள்ளி அனுபவக் கருத்தாய்வில் தெரியவந்துள்ள முடிவில் மேற்கூறப்படும் தரவுகள் இடம்பெற்றுள்ளன.
நவம்பர் 2025ல் பாலர் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் கிட்டத்தட்ட 1,800 பேர் இந்தக் கருத்தாய்வில் பங்குபெற்றனர்.
கரையோரப் பூந்தோட்டத்தில் மே 9ல் நடைபெற்ற ‘ஸ்டார்ட் ஸ்மோல் ட்ரீம் பிக்’ பெருநடை நிகழ்ச்சியில் இந்த அமைப்பின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன.
பிள்ளைகளின் முழுமையான மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் வகையில் ‘பெற்றோர்-பாலர் பள்ளிப் பங்காளித்துவ வழிகாட்டி’ என்பதை உருவாக்கப் பாலர் பள்ளிகள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆகியோருடன் இணைந்து பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு (ECDA) செயல்பட்டு வருவதாக சமூக, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் கோ பெய் மிங், இந்நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இந்த வழிகாட்டி குறித்த கூடுதல் விவரங்கள் 2026-ஆம் ஆண்டின் பிற்பாதியில் வெளியாகும்.
தொடர்புடைய செய்திகள்
பாலர் பள்ளிகள்மீது பெற்றோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதில் தகவல் பரிமாற்றம் முக்கியமானது என்பதை இரண்டு பிள்ளைகளின் தாயாரான ஜெயசுதா சமுத்திரன், 35, ஏற்றுக்கொண்டார்.
“செய்திகள் வாயிலாகவோ பள்ளிகளிடமிருந்தோ இத்தகைய குறைபாடுகள் பற்றிய சம்பவங்களை நாம் கேள்விப்படும்போது, ஒரு சமூகமாக நாம் அவற்றைத் தீவிரமாகக் கருதுகிறோம் என்ற நம்பிக்கையை அது எங்களுக்கு அளிக்கிறது,” என்று மூன்றாவது பிள்ளைக்குத் தாயாகவிருக்கும் அவர் கூறினார்.
பிள்ளைகளுக்கு இடையிலான சண்டைகள், போன்ற சிறிய சம்பவங்கள் குறித்துப் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் முனைப்புடன் தகவல் தெரிவிப்பது நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது என்று அவர் கூறினார்.
“பெரும்பாலானவர்கள் நமது பிள்ளைகளைத் தங்களின் சொந்தப் பிள்ளைகளைப்போலவே கவனித்துக்கொள்வதை என்னால் காண முடிகிறது. அதனால், இந்த அமைப்பின் மீது எனக்குப் பெரும் நம்பிக்கை உள்ளது,” என்று அவர் கூறினார்.
2023ல் பிள்ளைகள் முறையாகக் கையாளப்படாதது தொடர்பில் 169 சம்பவங்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், 2024ல் அந்த எண்ணிக்கை 227ஆக அதிகரித்தது.

