சிங்கப்பூரர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் அறிகுறிகள் உள்ளபோதும் இளவயதில் ஏற்படக்கூடிய மறதிநோய்க்கான சோதனையைச் செய்ய விரும்புவதில்லை.
18 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இடையே நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது.
‘மில்லியூ இன்சைட்’ ஆய்வு நிறுவனம், மறதிநோய் குறித்த கண்ணோட்டங்களின் தொடர்பிலான அந்த ஆய்வை கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தியது. ஆய்வின் முடிவுகள் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இணையம்வழி மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் 1,000 பேர் கலந்துகொண்டனர். இளவயதில் ஏற்படக்கூடிய மறதிநோயில் அது கவனம் செலுத்தியது.
‘டிமென்ஷியா சிங்கப்பூர்’ எனும் சமூக சேவை அமைப்புடன் இணைந்து அந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இளவயதில் ஏற்படக்கூடிய மறதிநோய் என்பது, 65 வயதுக்குக் குறைவானோருக்கு ஏற்படும் மறதிநோயாகும்.
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 3,700 பேர் இளவயதில் ஏற்படக்கூடிய மறதிநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் அதிகமானோர் இளவயதில் ஏற்படக்கூடிய மறதிநோய்க்கான அறிகுறிகளால் பாதிக்கப்படுவதாக தேசிய நரம்பியல் கழகம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
மூன்று வெவ்வேறு வயதுப் பிரிவுகளிடையே ஆய்வு நடத்தப்பட்டது. 18 முதல் 27 வயது வரையில் உள்ளவர்கள் அடங்கிய ‘ஜென் ஸி’ பிரிவு, 28 முதல் 43 வயது வரையில் உள்ளவர்கள் அடங்கிய ‘மில்லெனியல்’ பிரிவு, 33 முதல் 64 வயது வரையில் உள்ளவர்கள் அடங்கிய ‘ஜென் எக்ஸ்’ பிரிவு ஆகியவையே அவை.
அவர்களில் சராசரியாக 53.3 விழுக்காட்டினர் தங்களுக்கு அறிகுறிகள் ஏற்பட்டால், மறதிநோய்க்கான சோதனைகளைச் செய்யும் சாத்தியம் அதிகம் இருப்பதாகக் கூறினர்.
இருப்பினும், ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் முறையே 53 விழுக்காட்டினர், 43 விழுக்காட்டினர், 44 விழுக்காட்டினர் தாங்கள் மறதிநோய்க்கான சோதனை செய்யும் சாத்தியம் குறைவு அல்லது இல்லை என்று தெரிவித்தனர்.
சோதனை செய்வதற்குப் போதிய பணம் இல்லாததே முக்கியக் காரணமாகப் பதிவானது. அதனைத் தொடர்ந்து, 33 விழுக்காட்டினர் முடிவுகள் குறித்து அஞ்சுவதாகக் குறிப்பிட்டனர்.