சிங்கப்பூரின் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி சுஷில் சுகுமாறன் நாயரை அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஜூன் 15ஆம் தேதி முதல் அப்பதவிக்கு நியமித்துள்ளார் என்று ஜூன் 12ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
கடந்த மார்ச் மாதம் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் நீதித்துறை ஆணையராக அவர் செயல்பட்டார்.
அத்தகைய பொறுப்புகளில் நிதி, பங்குப் பத்திரங்கள், வங்கி, சிக்கலான வணிக வழக்குகள், நிறுவனம் நொடித்துப் போதல், அறக்கட்டளை, நடுவர் மன்றம், சட்டரீதியாக ஒருவர் செய்த தவறுகள் தொடர்பிலான பல வழக்குகளை அவர் விசாரித்துள்ளார்.
திரு சுஷில் சுகுமாறன் நாயர், 1989ல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப்படிப்பை (ஹானர்ஸ்) முடித்தார். 1990ல் அவர் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் டிரிவ் & நேப்பியர் சட்ட அலுவலகத்தில் சேர்ந்து 35 ஆண்டுகாலம் அவர் பணியாற்றினார். அப்போது ஆசிய பசிபிக் வட்டாரம் முழுவதும் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு அதில் அவர் நிபுணத்துவம் பெற்றார்.
அதே நிறுவனத்தில் துணைத் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் அவர் செயல்பட்டார். நிறுவனங்களின் மறுசீரமைப்பு, பயிற்சிக் குழுவின் தலைவராகவும் அவர் ஒரே நேரத்தில் பணியாற்றினார்.
உச்ச நீதிமன்ற அமர்வில் தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு நீதிபதிகள், மேல்முறையீட்டுப் பிரிவின் நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்த நீதிபதிகள், அனைத்துலக நீதிபதிகள், நீதித்துறை ஆணையர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
நீதிபதி சுஷில் சுகுமாறன் நாயர் நியமனத்துடன் உச்ச நீதிமன்றம் மொத்தம் 33 நீதிபதிகளையும் 26 அனைத்துலக நீதிபதிகளையும் கொண்டிருக்கும்.

