தற்காலிகப் பணித்தடை விதிக்கப்பட்ட வழக்கறிஞர் ரவி மாடசாமி, பொது இடத்தில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் ஒருவரைத் தாக்கியதாகவும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் இயோ சூ காங் பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு அருகில் ஓர் ஆடவரின் இடது கன்னத்தில் ரவி அறைந்ததாகக் கூறப்படுகிறது.
ரயில் நிலையத்தில் இருந்தபோது ரவி உரக்கக் கத்தியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது காவலில் இருக்கும் 54 வயது ரவி, காணொளி இணைப்பின்வழி மாவட்ட நீதிபதி லொரேன் ஹோவின் முன்னிலையில் காட்சிதந்தார். தனது வழக்கைக் கையாளும் புலனாய்வு அதிகாரி குற்றப் பத்திரிகைகளின் பிரதியைத் தன்னிடம் தர மறுத்துவிட்டதாக அவர் நீதிபதியிடம் கூறினார். அதோடு, தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்தார்.
ரவி பெருவிரைவு ரயில் நிலையத்தில் கண்டபடி கத்திக் கொண்டிருந்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார்.
ரவியை யாரோ பெயர் சொல்லிக் கூப்பிட்டபோது, தன்னை “எம் ரவியின் சகோதரி” என்று அவர் அடையாளம் காட்டிக் கொண்டதாகவும், தனக்கு இருமனக் குழப்பம் இருப்பதாக அவர் சொன்னதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ரவியை மருத்துவப் பரிசோதனைக்காக மனநல மருத்துவமனையில் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். ரவி மீதான வழக்கு ஜூலை 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ரவி தற்போது ஐந்து ஆண்டுகாலப் பணித்தடையின்கீழ் இருக்கிறார். சிங்கப்பூரின் நீதித் துறை, தலைமைச் சட்ட அதிகாரி, அரசாங்க வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கம் ஆகியவற்றுக்கு எதிராக அடிப்படையின்றி கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து பணித்தடை விதிக்கப்பட்டது.


