வீடு புகுந்து திருடியதாகச் சந்தேகம்: 4 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

புக்கிட் தீமா கைதுச் சம்பவம்

வீடு புகுந்து திருடியதாகச் சந்தேகம்: 4 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

2 mins read
90982804-af67-4a22-b6c9-7e46466fde09
கதவுகளை வல்லந்தமாகத் திறக்க உதவும் திருப்புளிகள், குறடுகள், துணி, சுமார் $400 ரொக்கம் முதலியவை சந்தேக நபர்களிடம் இருந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் தீமாவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) கைது செய்யப்பட்ட நான்கு ஆடவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வீடு புகுந்து திருடும் சீன நாட்டுக் கும்பலுடன் அவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கைதான நால்வரும் சீன நாட்டினர். சுவோ இங்குய், 36; யாங் சாவ்,41; சாவ் சிஃபா, 36; ஹி ஜியாவ், 38 ஆகியோர் மீது ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) குற்றஞ்சாட்டப்பட்டது.

வீட்டை வலுக்கட்டாயமாகத் திறக்கப் பயன்படுத்தப்படும் கருவிகளை வைத்திருந்ததற்காக அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

கிரீன்லீஃப் குடியிருப்புப் பேட்டைக்கு அருகில் உள்ள ரயில் பசுமைப் பாதையில் அவர்கள் பிடிபட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. அவர்களிடமிருந்து இரு கறுப்பு முகமூடிகள், மூன்று திருப்புளிகள், மூன்று இணைக் கையுறைகள், இரண்டு குறடுகள், ஒரு மின்சாரக் கைவிளக்கு, கிட்டத்தட்ட $400 ரொக்கம் முதலியவை கைப்பற்றப்பட்டன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், சந்தேக நபர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படக்கூடும்.

ஆகஸ்ட் 8ஆம் தேதி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது நால்வரும் ஒரு பூங்காவில் சந்தேகப்படும் வகையில் நடந்துகொண்டனர். காவல்துறையினர் அருகே சென்றபோது அவர்கள் வனப்பகுதிக்குள் ஓடிவிட்டனர்.

அவர்களில் இருவர் இரண்டு மணி நேரத்திற்குள் பிடிபட்டனர். மூன்றாமவர் கிளமெண்டி கடைத்தொகுதிக்கு அருகில் அதே நாள் (ஆகஸ்ட் 8) கைது செய்யப்பட்டார். நாலாம் நபர் அடுத்த நாள் காலையில் கேலாங் ஹோட்டலில் கைதானார்.

அவர்கள் நால்வரும் சீனாவின் குவேசோவ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சமூக வருகை அனுமதி வைத்திருந்த அவர்கள் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக ஆகஸ்ட் 8ஆம் தேதி நுழைந்தனர். அவர்களில் மூவர் ஏற்கெனவே இங்கு வந்திருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் ஏப்ரல் மாதத்திற்கும் ஜூலைக்கும் இடையில் வீடு புகுந்து திருடிய சம்பவங்களுடன் அவர்களுக்குத் தொடர்பிருக்கக்கூடும் என்று காவல்துறையினர் கூறினர். மூன்று மாதக் காலத்தில் ரயில் பசுமைப் பாதைக்கு அருகில் அத்தகைய மூன்று சம்பவங்கள் நடந்தன. இரண்டு சம்பவங்களில் $60,000 பெறுமான விலையுயர்ந்த கடிகாரங்களும் நகைகளும் திருடு போயின.

சந்தேக நபர்கள் நால்வரும் விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குப் பிணை வழங்கப்படவில்லை.

ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர்களின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்