தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சொந்த வளாகம்: பேச்சுவார்த்தை நடத்தும் எஸ்யுஎஸ்எஸ்

2 mins read
e009370b-ff92-4cc4-bdbd-d8494e7ea003
மார்ச் 4, 2023 அன்று எடுக்கப்பட்ட சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் (எஸ்யுஎஸ்எஸ்) புகைப்படம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் (எஸ்யுஎஸ்எஸ்) தனக்கென சொந்தமான ஒரு வளாகம் அமைத்துத் தர வலியுறுத்தி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அது தற்போது வாடகை வளாகத்தில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் ஆறாவது பல்கலைக்கழகமான எஸ்யுஎஸ்எஸ்சில் கிட்டத்தட்ட 13,850 மாணவர்கள் பகுதிநேரமாகவும் 4,000 மாணவர்கள் முழுநேரமாகவும் இளங்கலைப் பட்டக்கல்வி பயின்று வருகின்றனர் எனவும் இதைக் கருத்தில் கொண்டு அதனுடைய தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு வளாகம் அமைத்துதர வேண்டும் எனவும் எஸ்யுஎஸ்எஸ் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அங்கு பயிலும் பெரும்பாலான மாணவர்கள் பணியில் உள்ளவர்கள்.

அதனால் தீவு முழுவதும் விரைந்து செல்வதற்கு ஏற்ற வசதியான இடத்தைப் பல்கலைக்கழகம் விரும்புகிறது.

தொழில்துறையினருடன் இணைந்து யதார்த்தமான கற்றலை வளர்ப்பதற்கு ஏற்றவாறு இருக்கும் இடத்தை அரசாங்கம் தேர்வுசெய்ய வேண்டும் என எஸ்யுஎஸ்எஸ்சின் தலைவர் டான் டாய் யோங் கூறினார்.

மேலும், பெருவிரைவு ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் நடந்து செல்லும் தூரத்தில் இருக்க வேண்டும் எனவும் இரவு வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு இது வசதியாக இருக்கும் எனவும் அவர் சொன்னார்.

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் எஸ்யுஎஸ்எஸ் வாடகை வளாகத்தில் இயங்கி வருகிறது.

புதிய வளாகம் குறித்துக் கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எஸ்யுஎஸ்எஸ் முதன்முதலில் மூன்று ஆண்டுகளுக்கு முன் தெரிவித்தது. அதற்குப் பிறகு இப்பொழுதுதான் அதை வலியுறுத்தியுள்ளது.

பல்கலைக்கழகம் தற்போது கிளமெண்டி சாலையில் உள்ள சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்திடமிருந்து இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்