சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்திற்கு (எஸ்யுடிடி) சொந்தமான காற்பந்துத் திடலை 181 முறை அனுமதியின்றி முன்பதிவு செய்ததாகக் கூறப்படும் ஆடவர்மீது, ஏமாற்றியதற்காக மூன்று குற்றச்சாட்டுகள் புதன்கிழமை (செப்டம்பர் 23) சுமத்தப்பட்டன.
குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தின் துணை மேலாளராகப் பணியாற்றிய 41 வயது சஷி எம் கிருபாகரன், அந்த முன்பதிவுகள் பல்கலைக்கழகம் தொடர்பான நிகழ்வுகளுக்கானவை எனக் கூறியிருந்தார்.
அவ்வாறு கூறியதன் மூலம், உடலுறுதித் தீர்வுகளை வழங்கும் ‘எக்சர்-ஃபிட் கன்சல்ட்டன்சி சர்வீசஸ்’ (Exer-Fit Consultancy Services) நிறுவனத்தை முன்பதிவுக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய அவர் தூண்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் பல்கலைக்கழகத்திற்கு $130,000க்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் காவல்துறை செப்டம்பர் 22ஆம் தேதி தெரிவித்தது.
பல்கலைக்கழகத்திற்கும் ‘எக்சர்-ஃபிட்’ நிறுவனத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன என்பதை நீதிமன்ற ஆவணங்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை.
இருப்பினும், ‘ஜாப்ஸ்திரீட்’ இணையவாசலில் ‘எக்சர்-ஃபிட்’ நிறுவனம் அண்மையில் வெளியிட்ட விளம்பரம் ஒன்று, அப்பல்கலைக்கழகத்தின் விளையாட்டுப் பொழுதுபோக்கு உடலுறுதிக் கூடத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு அந்நிறுவனம் ஆதரவளித்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.
சஷி, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 14 முதல் டிசம்பர் 30 வரை காற்பந்து திடலை 37 முறை முன்பதிவு செய்ததன் மூலம் ‘எக்சர்-ஃபிட்’ நிறுவனத்தை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. அதனால், $23,000க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது.
மேலும், அந்த முன்பதிவுகள் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கானவை எனக் கூறி, அந்த நிறுவனத்திடம் பொய் சொன்னதாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரது வழக்கு மீண்டும் அக்டோபரில் விசாரணைக்கு வரும்.
