உலக அளவில் வளர்ச்சி கண்டுள்ள குறிமுறையாக்கப் பள்ளி ஒன்று, சிங்கப்பூரில் அதன் முதல் மாணவர் சேர்க்கை நடவடிக்கையில் 3,000 விண்ணப்பங்களைப் பெற்றது.
தீவிரமான தேர்வுமுறைக்குப் பிறகு, முதல் மாணவர் சேர்க்கை நடவடிக்கையிலிருந்து 190 மாணவர்கள் இவ்வாரம் ‘42 சிங்கப்பூர்’ (42எஸ்ஜி) எனும் அப்பள்ளிக்குச் செல்வார்கள்.
18 வயது முதல் 60 வயது வரையிலான மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்னர், 26 நாள்கள் தீவிரப் பயிற்சியை மேற்கொண்டனர்.
42எஸ்ஜி வளாகத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்த பல்கலைக்கழகம், 200 விண்ணப்பதாரர்களுக்கு இடம் வழங்கப்பட்டதாகவும், அவர்களில் 96 விழுக்காட்டினர் மட்டுமே அதனை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியது.
42எஸ்ஜி முன்பு இருந்த கல்வித் தகுதிகளைப் பொருட்படுத்தாமல் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்குத் திறக்கப்பட்டுள்ளது.
தகவல்தொடர்பு, தொழில்நுட்பத் துறையில் உள்ள வேலைகளுக்குத் தேவையான திறன்களை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க அது நோக்கம் கொண்டுள்ளது.
சிங்கப்பூர் ஆண்கள் தேசிய சேவையை முடித்திருக்க வேண்டும்.
குறிமுறையாக்கம், கணினி நிரலாக்கம், இணையப் பாதுகாப்பு, தரவு அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் இத்திட்டத்தில் வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
பாரிஸில் உள்ள ‘இகோல் 42” பள்ளியைப் பின்பற்றுகிறது 42எஸ்ஜி.
42எஸ்ஜியில் ஆசிரியர்கள் இருக்கமாட்டார்கள். விரிவுரை வகுப்புகள் இடம்பெறா. அவற்றுக்குப் பதிலாக விளையாட்டு சார்ந்த சூழலில், திட்ட அடிப்படையிலான கற்றல் நடத்தப்படும்.
சிங்கப்பூர் வடிவமைப்பு, தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (எஸ்யுடிடி) அமைந்துள்ள 42எஸ்ஜி வளாகம் 880 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
அங்கு 150 கணினி முனையங்கள் அமைந்துள்ளன. ‘42 பாரிஸ்’இன் சேவை வழங்கிகளுடன் அவை இணைக்கப்பட்டுள்ளன.
அதனால் ‘42 கட்டமைப்பில்’ இருக்கும் 28 நாடுகளுடன் சிங்கப்பூரும் சேர்ந்துகொண்டுள்ளது. அதில் 18,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு இந்தத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது. ‘42எஸ்ஜி’இன் தொழில்துறைப் பங்காளியான ‘ஃபுட்பாண்டா’ அதற்கு $600,000 நன்கொடை வழங்கியுள்ளது.
அந்தத் திட்டத்திற்கு எந்தவொரு துணைப்பாடக் கட்டணமும் செலுத்தவேண்டியதில்லை.

