கடல்துறைப் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் சிங்கப்பூருடன் தற்காப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் சுவீடன் முன்னுரிமை அளிக்கிறது. சுவீடன் மன்னர் கார்ல் பதினாறாம் குஸ்டஃப், சிங்கப்பூருக்கு மேற்கொண்ட மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தில் இது வெளிப்பட்டது.
ஏற்கெனவே உள்ள தற்காப்பு உடன்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டன. சுவீடன் வெளியுறவு அமைச்சர் மரியா மால்மர் ஸ்டெனெர்கார்ட் உட்பட மன்னருடன் சிங்கப்பூர் வந்திருந்த அமைச்சர்கள், இருதரப்பு தற்காப்பு உறவின் வெவ்வேறு அம்சங்களின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினர்.
முன்னதாக நவம்பர் 15ஆம் தேதி, இருநாட்டு தற்காப்பு அமைச்சுகளும் 1998ன் புரிந்துணர்வுக் குறிப்பை விரிவுபடுத்தும் உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
அதன்படி, புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்கள், இருநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே கூடுதல் கூட்டு முயற்சி இடம்பெறும்.
சுவீடன் மன்னரின் வருகையின்போது, இங்கு கையெழுத்தான ஐந்து புரிந்துணர்வுக் குறிப்புகளில் இந்த உடன்பாடும் ஒன்று. இதர உடன்பாடுகள் விமானப் போக்குவரத்து, எரிசக்தி, சுகாதாரப் பராமரிப்புப் புத்தாக்கம், போக்குவரத்து தொடர்பிலானவை.
இந்தப் புரிந்துணர்வுக் குறிப்புகள், சிங்கப்பூருக்கும் சுவீடனுக்கும் இடையேயான பலதரப்பட்ட ஒத்துழைப்பைக் கோடிட்டுக் காட்டுவதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது.
இதற்கிடையே, சுவீடன் தற்காப்பு நிறுவனமான ‘சாப்’ (Saab) உடனான 2023ன் புரிந்துணர்வுக் குறிப்பை தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு புதன்கிழமை (நவம்பர் 20) விரிவுபடுத்தியது. கடல்துறைப் பாதுகாப்புக்கான கடல்நீரடித் தொழில்நுட்பத்தின் கூட்டு முயற்சி அதில் உள்ளடக்கப்படுகிறது.