தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடற்குறையுள்ளோருக்கு நீச்சல்: நிறைவு காணும் பயிற்றுவிப்பாளர்

2 mins read
2cdd330f-461b-42a0-90e7-a9653b03434c
கடற்படையில் முன்பு பணியாற்றிய சைலஸ் பரசுராமன் (வலது), கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக நீச்சல் கற்பிக்கிறார். - படம்: சமூக, கலாசார, இளையர்துறை அமைச்சு

சிங்கப்பூர் குடியரசு கடற்படையில் முன்னதாகப் பணியாற்றிய நீச்சல் பயிற்றுவிப்பாளர் சைலஸ் பரசுராமன், 52, கடந்த 12 ஆண்டுகளாக உடற்குறை உள்ளவர்களுக்கு நீச்சல் கற்பித்து வருகிறார்.

வழக்கமான நீச்சல் வகுப்புகளைத் தொடக்கத்தில் நடத்தி வந்த திரு சைலசுக்கு சிறப்புத் தேவையுள்ள சிறார்களுக்கான ‘ரெயின்போ சென்டர்’ நிலையம், மாறுபட்ட ஓர் கற்பித்தல் பயணத்திற்குத் தொடக்கப் புள்ளியாக இருந்தது.

சிறார்களின் முன்னேற்றம் இவர் மனதை மலர வைக்கிறது. “நீச்சல் அறவே தெரியாத சாதாரணமானவர்கள், எனது வழிகாட்டலின் துணையால் 25 மீட்டர் தூரத்திற்கு நீந்துகின்றனர். பிறரது ஆற்றலைப் பெருக்கும் வேகத்தை இவர்களது வெற்றி எனக்குத் தந்தது,” என்று திரு சைலஸ் கூறினார்.

வெவ்வேறு வகையான குறைபாடுகளுக்கும் மாற்றுத்திறன்களுக்கும் ஏற்ப இவர், கற்பித்தல் உத்திகளை வடிவமைத்து மேம்படுத்தி வருகிறார்.

“சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்கள், கற்றல் திறன் குறைபாடு உள்ளவர்கள், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் எனப் பலதரப்பினருக்கும் நான் கற்பிக்கிறேன். உடற்குறையோடு கற்பவர்கள் ஒவ்வொருவருக்குமான சவால்கள் தனிப்பட்டவை. அவர்கள் எந்த அளவுக்கு என்னிடம் கற்றுக்கொள்கிறார்களோ நானும் அவர்களிடம் இருந்து கற்கிறேன்,” என்று அவர் கூறினார்.

திரு சைலசைப் போலவே சிங்கப்பூரில் தற்போது ஏறத்தாழ 120 பேர், உடற்குறையுள்ளோரைப் பயிற்றுவிப்பதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளனர்.

புதன்கிழமை (நவம்பர் 20) அறிவிக்கப்பட்ட உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுப் பெருந்திட்டத்தின்படி, இத்தகைய ஆசிரியர்களின் எண்ணிக்கை 2030க்குள் 300க்குள் உயர்த்தப்படும்.

‘கோச்எஸ்ஜி’ (CoachSG) திட்டம், சில பங்காளி அமைப்புகளின் ஆலோசனையுடன் உடற்குறையுள்ளோருக்கான பயிற்றுவிப்பாளர்களை அங்கீகரிப்பதற்கான முறையைச் செயல்படுத்தவுள்ளது.

தொழில்துறை பங்காளிகளுடன் புதிய பயிற்சி வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

பயிற்சி அளித்தலையும் தாண்டி விளையாட்டு அறிவியல், விளையாட்டு மருத்துவம் ஆகிய துறைகளில் ‘ஸ்போர்ட்ஸ்எஸ்ஜி’, தனது திறன்களை வளர்க்க உள்ளது.

இந்தத் திட்டத்தைப் பெரிதும் வரவேற்பதாகக் கூறிய திரு சைலஸ், இதனால் திறனாளர்கள் பலர் மேலும் உருவாக முடியும் என நம்புகிறார்.

“விளையாட்டுத் திறன்களைக் கற்பவர்கள், மற்ற முயற்சிகளை மேற்கொள்வதற்கான நம்பிக்கையையும் பெறுவர். உடற்குறையுள்ளோருக்கும் இந்த நம்பிக்கையை வளர்க்கும் பயிற்றுவிப்பாளர்களின் பணி சிறந்தது. சரியான இலக்கை நோக்கி நாம் செல்கிறோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்