சாங்கி கடற்கரையில் நீச்சல் உள்ளிட்ட நீர் விளையாட்டுகள் அனைத்திற்கும் தேசியச் சுற்றுப்புற வாரியம் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
அது தொடர்பான தகவலை சனிக்கிழமையன்று (ஜூலை 6) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வாரியம் பதிவிட்டது.
ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று பாசிர் பாஞ்சாங் முனையத்தில் உள்ள ஒரு கப்பலில் எண்ணெய்க் கசிவுச் சம்பவம் ஏற்பட்டது. அதில் சிங்கப்பூரின் கடற்கரைகள் சில மோசமாக பாதிக்கப்பட்டன.
சாங்கி கடற்கரை எண்ணெய்க் கசிவுச் சம்பவத்தால் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு சாங்கி கடற்கரையில் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.
“கடந்த வாரம் சாங்கி கடற்கரை நீரின் தரம் நன்றாகவும் நிலையாகவும் இருந்தது, இப்போது அப்படித்தான் உள்ளது. கடலில் இருந்து எண்ணெய்ப் படலங்கள் பெரிய அளவில் அகற்றப்பட்டுள்ளன. அதனால் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளை மீட்டுக்கொள்கிறோம்,” என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
ஜூன் 15ஆம் தேதி ஈஸ்ட் கோஸ்ட் பார்க், லேப்ரடார் இயற்கை வனப்பகுதி, கெப்பல் பே, செந்தோசா உள்ளிட்ட கடற்கரைகள் எண்ணெய்ப் படலங்களால் பாதிக்கப்பட்டன.
மருத்துவர்கள் எச்சரிக்கை
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் கடல் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்காத நேரத்தில் அங்கு சிலர் அலையாடல் உள்ளிட்ட விளையாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கடல்நீர் பார்க்க சுத்தமாக இருப்பதால் அவ்வாறு விளையாடியதாக அவர்கள் கூறுகின்றனர். சுற்றுக்காவல் பணியிலிருந்த அதிகாரிகள் அங்கு வந்த பிறகு அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
கந்தகம் குறைவாக உள்ள எண்ணெய் கடுமையான சுகாதார பிரச்சினைகளைத் தரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எண்ணெய் கலந்த நீரைச் சுவாசிக்கும்போது மூச்சுத் திணறல், தலைவலி, தோல் எரிச்சல், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.
பாதிக்கட்ட நீரில் விளையாடியவர்கள் முதலில் சுத்தமான நீரில் குளிக்க வேண்டும். அதன் பிறகு சவர்க்காரம் பயன்படுத்தி குளிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மீண்டும் சுத்தமான நீரில் குளிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.