பொங்கோலில் முதன்முறையாக நடைபெற்ற பாட்டாளிக் கட்சி பிரசாரக் கூட்டத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) இரவு உரையாற்றிய கட்சித் தலைவர் சில்வியா லிம், தேர்தலுக்காகக் கட்சி களமிறக்கியுள்ள பெண் வேட்பாளர்களைப் பற்றிப் பேசினார்.
யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளியில் நடந்த கட்சியின் மூன்றாவது பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தப் பொதுத் தேர்தலுக்கு பாட்டளிக் கட்சி ஆறு பெண் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளதாகக் கூறினார்
“நாடாளுமன்றத்தில், குறிப்பாக எதிர்க்கட்சியில் பெண் வேட்பாளர்கள் தேவை,” என்றார் அவர்.
மேலும், பாட்டாளிக் கட்சிக்கு வாக்களிப்பது குறித்து மக்கள் தயங்கவோ, அஞ்சவோ வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.
“இம்முறை அனைத்து பாட்டாளிக் கட்சி வேட்பாளர்களும் மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள் என்று 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட எனது அனுபவத்தில் நான் உறுதியாக சொல்ல முடியும்,” என்றார் திருவாட்டி லிம்.
அடுத்த தேர்தலில் தொகுதி எல்லைகள் மறுபடியும் மாறலாம் என்றும் இதனால் நேரம் கடத்த வேண்டாம் என்றும் வாக்காளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
“இம்முறை நீங்கள் எங்களுக்கு வாக்களிக்காவிட்டால் அடுத்த முறை உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்,” என்றார் அவர்.