பாட்டாளிக் கட்சி 14 ஆண்டுகளுக்கு முன்னதாக அல்ஜுனிட் குழுத்தொகுதியைக் கைப்பற்றியபோது நாடு நலிவு அடையவில்லையே என்று அதன் தலைவர் சில்வியா லிம் கூறியுள்ளார்.
ஆண்டர்சன்-சிரான்கூன் தொடக்கக் கல்லூரியில் வியாழக்கிழமை (மே 1) நடைபெற்ற அக்கட்சியின் இறுதி பிரசாரக் கூட்டத்தில் திருவாட்டி லிம் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
2011 தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் செயல் கட்சி (மசெக) அணியினரையும் பாட்டாளிக் கட்சி அணியிரையும் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ ஒப்பிட்டுப் பேசியபோது அவர் கூறிய வார்த்தைகளை திருவாட்டி லிம் நினைவுகூர்ந்தார்.
அமைச்சர்கள் இருவர், வருங்கால நாடாளுமன்ற நாயகர் ஒருவர், வருங்கால அமைச்சர் ஒருவர், சிறந்த அடித்தளத் தலைவர் ஒருவர் இடம்பெற்றிருந்த அப்போதைய மசெக வேட்பாளர்கள் கட்சிக்கு முக்கியமானவர்கள் என்று அமரர் லீ கூறியதை திருவாட்டி லீ சுட்டினார்.
அத்துடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அல்ஜுனிட் வாக்காளர்கள் வருத்தப்படக்கூடும் என்று அமரர் லீ எச்சரித்து இருந்ததையும் திருவாட்டி லிம் நினைவுபடுத்தினார்.
“ஆனால், அல்ஜுனிட் குழுத்தொகுதியை மசெக இழந்த பிறகு சிங்கப்பூர் நலிவடைந்துள்ளதா? வாழ்க்கை தொடர்கிறது. அத்துடன், தெரியாதவர் என்று அமரர் லீ அப்போது வர்ணித்த நபர், இப்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்,” என்று திருவாட்டி லிம், பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கைக் குறிப்பிட்டுப் பேசினார்.
வாக்காளர் ஒவ்வொருவர்க்கும் ஒரே வாக்கு இருந்தாலும் அனைவரது வாக்குகள் எதிர்காலத்தை முடிவு செய்யும் என்றார் திருவாட்டி லிம்.
திருவாட்டி லிம்முக்கு முன்னதாகப் பேசிய வேட்பாளர் ஜெரல்ட் கியாம், நாடாளுமன்றத்தில் பாட்டாளிக் கட்சி பொறுப்புடன் வாதிடுவதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“நாங்கள் சண்டையிடுவதோ கூச்சலிடுவதோ வசைபாடுவதோ இல்லை. உண்மைத் தகவல்களுடன், நியாயமாக வாதிடுவோம். விவாதங்கள் அதிக நேரம் நீடித்தாலும் அதன் வழியாகதான் அமைச்சர்கள் தங்கள் விவகாரங்களுக்கு விளக்கமளிக்க வைக்க முடியும். அதன் வழியாகதான் கொள்கைகளும் மேம்படுகின்றன,” என்று திரு கியாம் கூறினார்.