சிங்கப்பூரின் எஸ்டி என்ஜினியரிங் நிறுவனத்தின் நகர்ப்புறத் தீர்வுகள் பிரிவிற்கு தைவானின் ‘தாவோயுவான் எம்ஆர்டி பிரவுன் லைன்’ ரயில் பாதைத் திட்டத்திற்கான 840 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சேவை ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
இத்திட்டம் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் தொடங்கப்பட்டு, அடுத்த எட்டு ஆண்டுகளில் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாவோயுவான் நகரை கிரேட்டர் தைப்பே பகுதியுடன் இணைக்கும் இந்த 11.4 கிலோமீட்டர் நீள ரயில் பாதையில் ஏழு ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தின்கீழ், எஸ்டி என்ஜினியரிங் நிறுவனம் திட்ட மேலாண்மை, சமிக்ஞை அமைப்பு, ரயில் பாதை அமைத்தல், துணை மின்நிலையக் கட்டடப் பணிகளுக்குப் பொறுப்பேற்கும். அதேவேளையில், ஹூண்டாய் ரோட்டம் நிறுவனம் ரயில் பெட்டிகளையும் மின்சார விநியோக அமைப்பையும் வழங்கும்.
போக்குவரத்து நிறுவனங்களிடையே, பெரிய அளவிலான திட்டங்களைத் தடையின்றி ஒருங்கிணைத்து நிறைவேற்றக்கூடிய பங்காளிகளுக்கான தேவை அதிகரிப்பதாக எஸ்டி என்ஜினியரிங் கூறியது. அது கடந்த 30 ஆண்டுகளாகத் தைவான் உள்ளிட்ட 50 நகரங்களில் 200க்கும் மேற்பட்ட ரயில் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

