சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 12,700 வாகனங்களில் பிரச்சினைக்குரிய டகாட்டா நிறுவனத்தின் காற்றுப்பைகள் நீக்கப்படவில்லை என நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (பிப்ரவரி 2) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
2013ஆம் ஆண்டு, அந்தக் காற்றுப்பைகள் பொருத்தப்பட்ட வாகனங்களைத் தயாரித்த, இறக்குமதி செய்த அல்லது விற்ற நிறுவனங்களுக்கு அவற்றை மீட்டுக்கொள்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அதை நிறைவேற்றத் தவறிய உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோர்மீது ஆணையம் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
2022ஆம் ஆண்டு வாகன விபத்தின்போது காற்றுப்பை வெளியானதில் 57 வயது மைக்கல் ஓங் கொங் மெங் மாண்டார்.
சிங்கப்பூரில் காற்றுப்பையால் ஏற்பட்ட கோளாற்றால் நடந்த முதல் உயிரிழப்பு இது.
திரு ஓங் வைத்திருந்த ஹோண்டா நிறுவனத்தின் ‘ஹோண்டா ஃபிட்’ ரக கார், ஹாங் சின் மோட்டார்ஸ் எனும் வாகன இறக்குமதி நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டது.
அந்நிறுவனம் 2017ஆம் ஆண்டு மூடப்பட்டதால், டகாட்டா காற்றுப்பை கோளாறு குறித்த தகவல்கள் அவரை சென்றுசேரவில்லை.
சிங்கப்பூரில் வாகனங்கள் மீட்டுக்கொள்ளப்படும் கட்டமைப்பின்கீழ், பாதிக்கப்பட்ட வாகனங்களை அடையாளம் காண்பது, உரிமையாளர்களுக்குத் தகவல் தெரிவிப்பது, பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது போன்றவை வாகன உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் ஆகியோரின் கடமை என நிலப்போக்குவரத்து ஆணையம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அந்த விதிமுறைகளுக்கு உட்படத் தவறும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு வாகனத்திற்கும் $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அதிகபட்சமாக $50,000 வரை அபராதம் விதிக்கப்படக்கூடும்.

