தோக்கியோ: ஜப்பானிய நிறுவனங்கள் வெப்பத் தாக்கத்திலிருந்து ஊழியர்களைப் பாதுகாக்க, தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதை அந்நாட்டு அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
அண்மை ஆண்டுகளில் கடுமையான கோடைக்கால வெப்பத்தால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துவருவதால் அந்தப் புதிய விதிமுறை நடப்புக்கு வந்துள்ளது.
ஜூன் 1ஆம் தேதி அமலுக்கு வந்த திருத்தப்பட்ட உத்தரவின்கீழ், வெப்பத்தாக்க அறிகுறிகளைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதம், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாதது போன்ற காரணங்களால் மரணங்கள் ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்த பிறகும் நடவடிக்கை எடுக்காத வர்த்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வெப்பநிலை 31 டிகிரி செல்சியசுக்குமேல் இருக்கும்போது (அல்லது ஈரப்பதம் போன்ற பல்வேறு அம்சங்களைக் கருத்தில்கொண்டு கணக்கிடப்படும் ‘வெட் பல்ப் குளோப்’ முறையில் 28 டிகிரி அல்லது அதற்குமேல் பதிவாகும்போது), தொடர்ந்து ஒரு மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். ஒரு நாளில் நான்கு மணி நேரம் வேலை செய்வோருக்கும் இது பொருந்தும்.
ஒவ்வொரு வேலையிடத்திலும் வெப்பத் தாக்கப் பாதிப்பு ஏற்படும் சாத்தியத்தைக் கண்காணித்து, தகவல் அனுப்ப ஊழியர் ஒருவரை நிறுவனங்கள் நியமிக்கவேண்டும்.
ஜப்பானில் கடந்த ஆண்டு வெப்பத் தாக்கத்தால் ஏற்பட்ட வேலையிட மரணங்களின் எண்ணிக்கை 31. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அந்த எண்ணிக்கை 30க்குமேல் பதிவாகியுள்ளது.