சிங்கப்பூரின் கெப்பல் நிறுவனம், வியட்னாமியக் கூட்டு நிறுவனமான சோவிகா குழுமம் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து கடலுக்கடியில் புதிய கண்ணாடி இழை கம்பிவடங்களை அமைப்பதற்கான திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டு முயற்சி குறித்து நன்கு அறிந்தவர்கள், இத்திட்டங்கள் வட்டாரத்தின் தரவு நிலையத் துறையை மேம்படுத்தும் எனத் தெரிவித்தனர்.
ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் கம்பிவடங்களின் முக்கிய சந்திப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் திகழ்கின்றன. செயற்கை நுண்ணறிவு, தரவு நிலையங்கள் ஆகியவற்றுக்கு அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய தங்கள் கட்டமைப்பை விரிவுபடுத்த பல முயற்சிகளை தென்கிழக்கு ஆசிய நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
இவற்றில் ஒன்றான வியட்னாம் 2030க்குள் கடலுக்கடியில் 10 புதிய கம்பிவடங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வியட்னாமை நேரடியாக சிங்கப்பூருடன் இணைக்க கம்பிவடம் ஒன்றை அமைப்பது குறித்து கெப்பலும் வியட்னாமிய நிறுவனமும் ஆலோசித்து வருவதாகவும் இத்திட்டத்தைச் செயல்படுத்த கிட்டத்தட்ட 150 மில்லியன் அமெரிக்க வெள்ளி செலவாகும் எனவும் கூறப்பட்டது.

