வளர்தமிழ் இயக்கம் ஆண்டுதோறும் நடத்திவரும் தமிழ் மொழி விழா, 19வது பதிப்பாக அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.
‘இளமை’ என்ற கருப்பொருளுடன் திட்டமிடப்பட்டுள்ள இவ்விழா, காலங்காலமாக பெருகிவரும் தமிழ் மொழியின் அழகையும் கலாசாரத்தையும் கொண்டாடும் நிகழ்ச்சிகளை இளையர்களுக்கு மட்டுமல்லாமல் மனதளவில் இளையர்களாக இருக்கும் அனைவருக்கும் கொண்டுசேர்க்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக செப்டம்பர் 17ஆம் தேதி பங்காளித்துவ அமைப்புகளுக்காக நடத்திய விளக்கக் கூட்டத்தில் வளர்தமிழ் இயக்கம் தெரிவித்தது.
“தமிழ் என்பது ஒரு செம்மொழி மட்டுமல்ல. அது எக்காலத்திற்குமேற்ற இளமையான துடிப்புமிக்க மொழி என்பதையும் குறிப்பாக இளையர்களைக் கவரக்கூடிய ஒரு மொழி என்பதையும் எடுத்துரைப்பதற்கு, புத்தாக்கச் சிந்தனைகளுடன் பல புதிய உத்திகளைக் கடைப்பிடித்து இளமை என்ற கருப்பொருளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்,” என்று வளர்தமிழ் இயக்கத்தின் புதிய தலைவர் திரு நசீர் கனி தமிழ் முரசிடம் கூறினார்.
அவர் தலைமைப் பதவியை ஏற்றதைத் தொடர்ந்து அவரின் பொறுப்பில் நடைபெறவிருக்கும் முதல் தமிழ் மொழி விழா இது. மேலும் பல புதிய அமைப்புகள் 2025ஆம் ஆண்டில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
“பல்வேறு அமைப்புகளின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒரே மாதத்திற்குள் ஒருங்கிணைப்பது சவாலாக இருந்து வருகிறது. இதை எவ்வாறு சிறப்பாகச் செய்து, நெருக்கடியின்றி பலரையும், குறிப்பாக இளையர்களையும் மாணவர்களையும் தமிழ் மொழி நிகழ்வுகளுக்கு ஈர்க்கலாம் என்பதே நமது நோக்கம்,” என்றார் திரு நசீர் கனி.
2025ஆம் ஆண்டின் விழாவில் தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழு, இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதி, தேசிய மொழிபெயர்ப்புக் குழு, தேசிய நூலக வாரியம், உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஆகிய அமைப்புகள் ஆதரவாளர்களாகச் செயல்படும்.
தமிழ் மொழி விழாவுக்கு இளமைத் துடிப்பும் துள்ளலும் மிகுந்த படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மேலும் தகவல்களைப் பெற NHB_TamilLanguageCouncil@nhb.gov.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
நிகழ்ச்சி திட்டப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலம் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 11 வரை என்றும் மேலும் நீட்டிப்பு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.