நவீன கட்டமைப்பில் வாசகர்களிடம் உரிய நேரத்தில் சரியான, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை அளிக்கும் உத்திகளை வடிவமைக்கும் புதிய திட்டத்தில் பங்கேற்று அதனைச் சிறப்பாக நிறைவு செய்துள்ளது தமிழ் முரசு குழு.
‘தி பைனான்சியல் டைம்ஸ்’ ஊடகத்தின் தலைமையில், ‘எஃப்டி ஸ்ட்ரேட்டஜீஸ்’ நிறுவனம், கூகல் செய்திச் செயல்திட்டத்துடன் இணைந்து நடத்திய தென்கிழக்காசிய புதிய எல்லைத் திட்டத்தில் எட்டு நாடுகளை சேர்ந்த 12 செய்தி நிறுவனங்கள் பங்கேற்றன.
ஏறத்தாழ 125ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட நிறுவனங்கள்முதல், ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட புதிய நிறுவனங்கள்வரை ஒண்றிணைந்து பங்கேற்ற இந்த நான்கு மாதத் திட்டத்தில், தமிழ் முரசு குழுவிலிருந்து வாசகர், வளர்ச்சி ஆசிரியர் எஸ்.வெங்கடேஷ்வரன் வழிகாட்டுதலில் காணொளித் தயாரிப்பாளர் த.கவி, செய்தியாளர் கீர்த்திகா ரவீந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் பங்கேற்புக்குத் தமிழ் முரசு ஆசிரியர் த.ராஜசேகர் பக்கபலமாக இருந்தார்.
அச்சு, மின்னிலக்கம் என இரு தளங்களிலும் செய்தி அளிக்கும் நிறுவனங்கள், இணையவழி மட்டும் செய்தி வழங்கும் நிறுவனங்கள் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றின் திட்டமிடல், செய்திச் சேகரிப்பு முறைகள், வழங்கும் விதம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தமிழ் முரசின் செய்தியாளர்கள், அவர்களின் செயல்முறைகள், தமிழ் முரசு இணையத்தளம், செயலி ஆகியவற்றில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள், வாசகர்களின் எதிர்பார்ப்பு உள்ளிட்டவை குறித்து விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெற்றன.
வாசகர்களின் எதிர்பார்ப்புகளுடன் செயல்முறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் உத்திகள் கண்டறியப்பட்டு விவாதிக்கப்பட்டன.
இந்த நான்கு மாதத் திட்டத்தில், உரிய நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், திறன்கள், எதிர்பார்ப்புகள், செயல்பாடுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.
எதிர்காலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயலாற்ற உதவும் திட்டவரைவை வகுத்து, இந்தத் திட்டத்தைச் சிறப்பாக நிறைவு செய்தது தமிழ் முரசு குழு.
தொடர்புடைய செய்திகள்
“அனைத்துலக அளவில் தடம்பதித்த ஊடகமான ‘தி பைனான்சியல் டைம்ஸ்’ தலைமையில் இயங்கும் உத்திகளுக்கான ஆலோசனைகள் வழங்கும் அமைப்பும் கூகல் நிறுவனமும் இணைந்து நடத்திய மிகப் பயனுள்ள திட்டத்தில் தமிழ் முரசு பங்கேற்றதில் பெருமை,” என்றார் தமிழ் முரசின் வாசகர், வளர்ச்சி ஆசிரியர் திரு வெங்கடேஷ்வரன்.
“அண்மைய ஆண்டுகளில் மின்னிலக்க உலகில் தமிழ் முரசு அதிவேக வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு செயலியை வெளியிட்டது உட்பட இந்த ஆண்டில் இணையத்தளத்தை உருமாற்றுவது, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆங்கில மொழிப்பெயர்ப்புகளை வழங்குவது, புது மின்னிதழ் அனுபவத்தை வடிவமைத்தது, மொழித்திறனை அதிகரிக்கும் ‘சொல்லாட்டம்’ விளையாட்டை வெளியிட்டது போன்ற பல புதிய மின்னிலக்க முயற்சிகளை தமிழ் முரசு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது,” என்றார் திரு வெங்கடேஷ்வரன்.
“இந்த நான்கு மாதத் திட்டத்தில் கற்றுகொண்ட தகவல்கள் மூலம் மேலும் பல புதிய முயற்சிகளுக்குத் திட்டமிட்டு வருகிறோம். வரும் 2025ஆம் ஆண்டில் மற்றபல புது அம்சங்களை வாசகர்கள் எதிர்பார்க்கலாம்,” என்று நம்பிக்கையுடன் சொன்னார் அவர்.

