தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் முரசு செயலிக்கு அனைத்துலக செய்தி ஊடகச் சங்கத்தின் வெள்ளி விருது

2 mins read
4357f253-3305-457a-ae2a-bf0c72bd0ead
இருமொழிப் பயன்பாடு, இளையர்களை மையப்படுத்தும் அம்சங்கள், இருவழித் தொடர்புத் தொழில்நுட்பம், காணொளிகள், வலையொளிகள் என்று செயலி வழங்கும் வெவ்வேறு சிறப்பியல்புகளின் அடிப்படையில் இந்த விருது மே 22ஆம் தேதி தமிழ் முரசுக்கு வழங்கப்பட்டது. - படம்: தமிழ் முரசு 

அனைத்துலக செய்தி ஊடகச் சங்க (INMA) விருதுகளில் தமிழ் முரசு செயலி வெள்ளி விருதைத் தட்டிச் சென்றது.

இருமொழிப் பயன்பாடு, இளையர்களை மையப்படுத்தும் அம்சங்கள், இருவழித் தொடர்புத் தொழில்நுட்பம், காணொளிகள், வலையொளிகள் என்று செயலி வழங்கும் வெவ்வேறு சிறப்பியல்புகளின் அடிப்படையில் இந்த விருது மே 22ஆம் தேதி தமிழ் முரசுக்கு வழங்கப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் எஸ்பிஎச் மீடியா குறுகிய காலத்தில் தமிழ் முரசு செயலியை வடிவமைத்து அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

“மக்கள் தேவைக்கேற்ப, செயலி போன்ற வடிவத்தில் தமிழ் முரசைக் கொண்டுவருவது மட்டுமன்றி, அதை அவ்வப்போது மேம்படுத்துவது ஒரு தொடர் முயற்சி,” என்றார் தமிழ் முரசின் வாசகர், வளர்ச்சிப் பிரிவு ஆசிரியர் எஸ்.வெங்கடேஷ்வரன்.

இன்றுவரை ஏறக்குறைய 27,000 முறை தமிழ் முரசு செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா, மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்தும் அதனை ஏராளமானோர் பயன்படுத்துகிறார்கள்.

கிட்டத்தட்ட ஒன்பது மாத ஆய்வு, உருவாக்கத்திற்குப் பிறகு தமிழ் முரசு செயலி 2023ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிமுகமானது.

அறிமுகம் கண்ட நான்கு மாதங்களில் செயலி ஏறத்தாழ 6,000 முறை பதிவிறக்கப்பட்டது.

மனிதக் குரலைப் போன்ற தானியங்கிக் குரலைக் கொண்டிருக்கும் ஒரு புதிய செயல்பாட்டைச் செயலியில் இணைக்க தற்போது தமிழ் முரசுக் குழு ஆராய்ந்து வருகிறது. மேலும் தமிழ் மொழித்திறனைச் சோதிக்கும் ‘முரசு சொல்லாட்டம்’ அங்கத்தை விரிவுபடுத்தும் திட்டங்களும் பரிசீலிக்கப்படுகின்றன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற INMA அனைத்துலக ஊடக விருது நிகழ்ச்சியில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பிஸ்னஸ் டைம்ஸ், பெரித்தா ஹரியான் ஊடகங்கள் விருதுகள் பெற்றன.

மொத்தம் 20 பிரிவுகளில் 49 நாடுகளிலிருந்து 839 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டன. அதில் ‘ஆகச் சிறந்த புதிய மின்னிலக்கத் தளம்’ பிரிவில் தமிழ் முரசு செயலி இரண்டாம் நிலையில் வந்தது.

சிறந்த புதிய ஒளி/குரல் தயாரிப்புக்கு முதல் இடத்தையும் அச்சு வகையின் சிறந்த பயன்பாட்டுக்கு இரண்டாவது இடத்தையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தட்டிச் சென்றது.

சிறந்த மின்னிலக்க உருமாற்றத்துக்காக பெரித்தா ஹரியான் நாளிதழ் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

அடுத்த தலைமுறை வாசகர் பிரிவை மேம்படுத்தும் சிறந்த முயற்சிக்காக பிஸ்னஸ் டைம்சின் செய்தி மடலான ‘த்ரைவ்’ சிறப்பு அங்கீகாரம் பெற்றது.

இந்த விருது குறித்த முழு விவரம்.

குறிப்புச் சொற்கள்