தமிழ் முரசின் 90 ஆம் ஆண்டுநிறைவை ஒட்டி, வண்ணப் பதாகைகள் கொண்ட கண்காட்சி, தற்போது இந்திய மரபுடைமை நிலையத்திற்கு இடம்பெயர்ந்துள்ளது.
இந்தக் கண்காட்சி, இதற்கு முன்னதாக ‘தமிழ் முரசு 90ஆம் ஆண்டுநிறைவு’ நிகழ்ச்சியின் வரவேற்புப் பகுதிக்கு அருகே அமைக்கப்பட்டது.
இரண்டு மீட்டர் உயரமும் ஒரு மீட்டர் அகலமும் கொண்டுள்ள எட்டுப் பதாகைகள் ஒவ்வொன்றும் தமிழ் முரசின் செழுமைமிக்க வரலாற்றை எடுத்துரைக்கின்றன.
ஜூலை 21ஆம் தேதி வரை இந்திய மரபுடைமை நிலையத்தில் இடம்பெறும் இந்தக் கண்காட்சி, ஜூலை 22ஆம் தேதி முதல் ஜூலை 30ஆம் தேதி வரை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் இந்திய மரபினைப் பறைசாற்றும் பொருள்களில் தமிழ் முரசுச் செய்தித்தாள் சிறப்பு வாய்ந்தது என்று இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவர் ஆர். ராஜாராம் தெரிவித்தார்.
செய்தி என்பது வரலாற்றின் முதலாவது வரைவு எனும் கூற்றுக்கு ஏற்ப, தமிழ் முரசு 90 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில், தமிழர்களின், மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சியை பதிவு செய்யும் கருவியாகவும் ஆவணமாகவும் இருந்திருக்கிறது, என்று அவர் கூறினார்.
“மற்ற புலம்பெயர் பத்திரிகைகள் தமது பூர்வீகமான தமிழ்நாட்டு செய்திகளில் அதிகக் கவனம் செலுத்திய காலகட்டத்தில் தமிழ் முரசு, சிங்கப்பூர் மண்ணின் கதைகளைப் பேச தொடங்கியது.
அதில் இடம்பெற்ற கட்டுரைகள், கதைகள், கவிதைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்நாட்டு படைப்பாளர்கள் யாவர், நமது மொழிக்கும், வாழ்வியலுக்கும் அவர்கள் ஆற்றிய பங்கு என்ன என்பதை பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளன,” என்றார் திரு ராஜாராம்.

