பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை உறுதிசெய்யும் வேட்புமனுத் தாக்கல் நிகழ்வு ஏப்ரல் 23ஆம் தேதி முற்பகல் 11 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை ஒன்பது வேட்புமனு தாக்கல் நிலையங்களில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
நாடாளுமன்றத்தின் 97 இடங்களில் 92க்கு போட்டி உண்டு என்பது வேட்புமனுத் தாக்கல் நிகழ்வு முடிவடைந்தவுடன் உறுதிசெய்யப்பட்டது. மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத் தொகுதியில் எந்தவோர் எதிர்க்கட்சி அணியும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால், அக்குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி (மசெக) அணி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
பரபரப்பான பொதுத் தேர்தல் களம் பற்றி கலந்துரையாட எஸ்பிஎச் ஊடக நிறுவனத்தின் தொலைக்காட்சி ஒளிப்பதிவுக் கூடத்திற்கு மூவர் அழைக்கப்பட்டிருந்தனர்: முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திரு முஹம்மது இர்ஷாத், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் முன்னாள் தலைவர் திரு சஞ்சய் முத்துகுமரன், தனியார் நிறுவன முதன்மைப் பயிலகத்தின் வட்டாரத் தலைவர் திருமதி ஜெயசுதா சமுத்திரன். கலந்துரையாடலை வழிநடத்தினார் தமிழ் முரசின் இணை ஆசிரியர் வீ. பழனிச்சாமி.
மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதால், மரின் பரேட் வட்டாரத்தில் பல்லாண்டுகளாக வசித்து வரும் திருமதி ஜெயசுதா, இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டார். அது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.
“மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், பாட்டாளிக் கட்சியின் உறுப்பினர்களும் மரின் பரேட் வட்டாரத்தில் பல மாதங்களுக்கு முன்பிருந்தே வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்படியிருக்கும் பட்சத்தில், அந்தத் தொகுதியில் பாட்டாளிக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தாமல் விட்டது எங்களுக்கு நிச்சயமாக ஏமாற்றத்தைத் தந்துள்ளது,” என்று அவர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மக்கள் செயல் கட்சியின் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும், மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை எனும் செய்தி எந்த அளவுக்கு இந்தத் தேர்தலில் மசெகவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திரு இர்ஷாத்திடம் கேட்கப்பட்டது.
“அடுத்த கட்டத்துக்கு நாட்டைக் கொண்டுசெல்ல திறமைமிக்க, இளமையான, ஐந்தாம் தலைமுறை வேட்பாளர்களை இப்போதே களமிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங், அனுபவமிக்க அமைச்சர்கள் உட்பட 20 பேருக்குப் பதிலாக புதியவர்களைத் தேர்வு செய்துள்ளார். மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் வழிவிட்டு ஒதுங்கியோரில் அடங்குவர். புதியவர்களுக்கு நிச்சயமாக அவர்களின் வழிகாட்டுதல்கள் இருக்கும்,” என்றார் இர்ஷாத்.
திரு சஞ்சய் முத்துக்குமரன், இந்தத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கிறார். அடுத்த ஒன்பது நாள்களில் தேர்தல் பிரசாரங்களில் வேட்பாளர்கள் முன்வைக்கும் யோசனைகள், திட்டங்களை நன்கு ஆராய்ந்து, அது எந்த அளவுக்கு மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதைச் சிந்தித்து, தமக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்களிக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய வேட்பாளர்களில் 13 பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ளது மசெக. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், அக்கட்சியில் இப்போது அதிகமான பெண் வேட்பாளர்கள் உள்ளனர். இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள் என்று ஜெயசுதாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “அரசாங்க மற்றும் தனியார் துறைகளிலிருந்து திறமையான பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளது ஒருபுறம் எனக்கு மகிழ்ச்சியளித்தாலும், இந்தப் பெண்களில் ஓர் இந்தியப் பெண்கூட இல்லையே என்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது,” என்றார்.
கடும் போட்டியை எதிர்நோக்கும் தொகுதிகளாக, வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத் தொகுதி, பொங்கோல் குழுத் தொகுதி, செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி போன்றவற்றைக் குறிப்பிட்டார் திரு சஞ்சய்.
இந்தத் தொழில்நுட்ப யுகத்தில், செயற்கை நுண்ணறிவு, டீப்ஃபேக் எனும் வன்போலிக் காணொளி போன்றவற்றைப் பயன்படுத்தி இணையத்தில் வலம்வரும் போலியான பிரசாரங்கள் பற்றி வாக்காளர்கள் மிகவும் கவனமாக இருக்கும் வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தி வருவதை மூவரும் ஒப்புக்கொண்டனர்.