‘தமிழ் வளர்ச்சிக்குழு’ எனப் பெயர் மாற்றம்

புதிய சின்னத்துடன் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு புதுப்பொலிவு

‘தமிழ் வளர்ச்சிக்குழு’ எனப் பெயர் மாற்றம்

3 mins read
f34590c8-fff2-435b-89df-b3cbd67416ab
ஒன்பது வயதுச் சிறுவன் வினேஷுடன் இணைந்து தமிழ் வளர்ச்சிக்குழுவின் புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தினார் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ். - படம்: த. கவி
multi-img1 of 3

தனது 20ஆம் ஆண்டுநிறைவைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு புதிய சின்னத்துடன் ‘தமிழ் வளர்ச்சிக்குழு’ எனப் பெயர் மாற்றம் கண்டுள்ளது.

மின்னிலக்க ஈடுபாடு, இளையர்கள், குடும்பத்தினரின் பங்களிப்பு ஆகியவற்றின் வாயிலாக தமிழ்மொழி கற்றலை ஊக்குவிக்கும் தனது மேம்பட்ட பங்கை வெளிப்படுத்தும் வகையில் இம்மாற்றம் அமைந்துள்ளது.

குழுவின் தலைவரும் மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சருமான தினேஷ் வாசு தாஸ் புதிய பெயரையும் சின்னத்தையும் மீடியாகார்ப் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) நடைபெற்ற தமிழ்மொழி விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அதிகாரத்துவமாக வெளியிட்டார்.

ஒன்பது வயதுச் சிறுவன் வினேஷ் சொல்லச் சொல்ல, ‘ஐபேட்’ கணினி வழியாக பாகங்களைத் தொகுத்து புதிய சின்னத்தை வெளியிட்டார் திரு தினேஷ்.

நிகழ்ச்சி தொடங்குமுன் தமிழ் முரசிடம் பேசிய திரு தினே‌ஷ், தமிழ், வகுப்பில் பாடமொழியாக மட்டுமல்லாமல் வாழும் மொழியாகவும் நிலைத்து நிற்க இந்தப் பெயர் மாற்றம் கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

வீட்டில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதாகக் குறிப்பிடும் புள்ளி விவரங்களைச் சுட்டிய அவர், அந்த நிலைமையை எப்படி மேம்படுத்தலாம் என்பதுபற்றி குழு ஆராயும் என்றார்.

அதே நேரத்தில், தமிழை எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி இளையர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் எண்ணங்களைத் தெரிந்துகொள்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார் திரு தினே‌ஷ்.

“தமிழ் வளர்ச்சிக்குழு, தமிழ்மொழியைச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் கொண்டுசெல்லும் இலக்கைப் பிரதிபலிக்கிறது.

“குறிப்பாக, மின்னிலக்கம், செயற்கை நுண்ணறிவு போன்ற புத்தாக்க முயற்சிகளைக் கொண்டு இளையர்களை மொழியின்பால் ஈர்ப்பதே எங்களின் முதன்மை இலக்காகும்,” என்றார் திரு தினேஷ்.

அத்துடன், பெற்றோர்கள் மாணவர்களுக்கு எப்படி ஆதரவு அளிக்கலாம், அவர்களுக்கு என்னென்ன வளங்கள் தேவைப்படுகின்றன என்பது பற்றியும் அக்குழு ஆராயும்.

2006ல் கல்வி அமைச்சால் நிறுவப்பட்டதுமுதல், பள்ளிகள், சமூக அமைப்புகள், கலாசாரப் பங்காளிகளுடன் இணைந்து தமிழ் மொழியைத் தொடர்ந்து அக்குழு ஊக்குவித்து வருகிறது.

இளையர்களை மொழியின் ஆதரவாளர்களாக ஈடுபடுத்துவதன் மூலம், தமிழ் மொழி மீதான ஆர்வத்தையும் அதன் மின்னிலக்க முக்கியத்துவத்தையும் தமிழ் வளர்ச்சிக் குழு தொடர்ந்து வலுப்படுத்தும். அதேசமயம், சிறுவயதிலிருந்தே பிள்ளைகளிடம் தமிழ் மொழியின் மீதான பற்றை வளர்க்கப் பெற்றோர்களையும் இக்குழு ஊக்குவிக்கும்.

தமிழ் மொழியின் கலாசாரச் செழுமையையும் அதன் தற்காலப் பொருத்தத்தையும் வெளிப்படுத்தும் அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளின் மூலம் இளையர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், பரந்த சமூகம் என அனைவரையும் ஈடுபடுத்துவதற்கான குழுவின் உறுதிப்பாட்டை இந்தப் பெயர் மாற்றம் மேலும் வலுப்படுத்துகிறது.

சிவப்பு மற்றும் தங்க நிறத்திலான புதிய சின்னத்தின் நடுவில் ‘தமிழ்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இது, உலகின் மிகப் பழமையான செம்மொழிகளில் ஒன்றான தமிழ்மொழியின் சிறப்பையும் நிலைத்த மதிப்பையும் அடையாளப்படுத்துவதோடு, அதன் பயன்பாடு, மதிப்பீடு, உயிரோட்டத்தை வலுப்படுத்துவதில் குழுவின் கவனத்தையும் வலியுறுத்துகிறது.

சின்னத்தின் பின்புலத்தில் வலிமையின் குறியீடாக விளங்கும் ஆலமரத்தின் உருவம் இடம்பெற்றுள்ளது. ஆழமான வேர்களையும் பரந்த கிளைகளையும் கொண்ட ஆலமரம் பாரம்பரியம், ஞானம், தலைமுறைகளைத் தாண்டிய தொடர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

ஒரு மரம் எப்படி ஆழமாக வேரூன்றி, அதே வேளையில் பரந்து விரிந்து வளர்கிறதோ, அதேபோன்று தமிழ் வளர்ச்சிக்குழுவும் மொழியின் செழுமையான மரபுகளைப் போற்றுவதோடு, கல்வி, சமூக முயற்சிகள் மூலம் புதிய வெளிப்பாடுகளை ஊக்குவிக்கும் என அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்