ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஆக உயரிய கௌரவமான அதிபர் விருதை ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியின் மூத்த தமிழாசிரியர் கமலவாணி பாலையன் பெற்றுள்ளார்.
இவ்வாண்டு விருது பெற்ற எட்டு ஆசிரியர்களுள் அவரும் ஒருவர்.
ஃபேர்மோன்ட் ஹோட்டலில் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற்ற விருதளிப்பு விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
“விருது பெற்ற எட்டு ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது அர்ப்பணிப்பு பிற ஆசிரியர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக விளங்குவதோடு அடுத்த தலைமுறையின் நற்பண்பிலும் வாழ்க்கையின் குறிக்கோளிலும் ஆசிரியர்கள் ஏற்படுத்தும் மாற்றத்தைச் செம்மையாக எடுத்துக் காட்டுகிறது,” என்று அதிபர் தர்மன் கூறினார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமது தமிழாசிரியர் பயணத்தைத் தொடர்ந்துவரும் திருவாட்டி கமலவாணி, தமக்கு இவ்விருது கிடைத்தது நெகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
தமது முயற்சிகளை அங்கீகரித்து, தம்மீது நம்பிக்கை வைத்துத் தம்மை இவ்விருதிற்குப் பரிந்துரைத்த ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரித் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
1998ல் அறிமுகம் கண்ட ஆசிரியர்களுக்கான அதிபர் விருது, சிங்கப்பூரின் இளம் சமூகத்தைத் தங்களது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவற்றின்வழி நன்கு வழிநடத்தும் தலைசிறந்த கல்வியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாண்டு 308 பள்ளிகளிலிருந்தும் ஏழு உயர்கல்வி நிலையங்களிலிருந்தும் மொத்தம் 5,125 கல்வியாளர்கள் இவ்விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டதாகக் கல்வி அமைச்சு தெரிவித்தது.
அவர்களுள் 18 கல்வியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டு, எட்டு ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அவர்களுக்கு விருதுடன் வெளிநாட்டுக் கற்றல் பயணம் ஒன்றில் பங்கெடுத்து சக கல்வியாளர்களுடன் தங்களது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும் கிட்டும். இறுதிச் சுற்றுக்குத் தேர்வானோருக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மாநாடுகள், கருத்தரங்குகள், பாடங்கள் ஆகியவற்றில் பங்கேற்க மானியம் வழங்கப்படும்.


