மற்ற நாடுகளுக்கு சிங்கப்பூர் ‘தர அளவுகோள்’: ஸ்டாலின்

ஜனவரி 2024ல் அனைத்துலக முதலீட்டாளர்கள் சந்திப்பை தமிழ்நாடு நடத்தவிருப்பதாகக் கூறிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சிங்கப்பூரின் திறன்கள் தேவை இருப்பதால் இந்நாட்டின் நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்யும்படி அழைப்பு விடுத்திருக்கிறார்.

உலகின் மிக அழகான, சிறந்த நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரைக் காண்பதில் மகிழ்ச்சியாகவும் பெருமையுடனும் இருப்பதாக திரு ஸ்டாலின் தெரிவித்தார்.

‘ஷங்ரிலா’ ஹோட்டலில் ‘சிக்கி’ எனப்­படும் சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக, தொழிற்சபை­யும் தமிழ்நாட்டில் முதலீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் ‘கைடன்ஸ் இந்தியா’ அமைப்பும் இணைந்து நேற்று நடத்திய தமிழ்நாட்டு முதலீட்டுக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

திரு ஸ்டாலின் முன்னிலையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை சிங்கப்பூர் தரப்பினரும் தமிழகத் தரப்பினரும் கையெழுத்திட்டனர். 

"அழகிலும் அமைதியிலும் தலைசிறந்த நாடு சிங்கப்பூர். எதிலும் ஓர் ஒழுங்கு, நேர்மை, சுத்தம். அதுதான் சிங்கப்பூர்," என்று திரு ஸ்டாலின் புகழ்ந்தார். 

“நகர நிர்வாகத்தில் அதிகபட்ச தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, திறமையாக பல்வேறு சவால்களை எதிர்கொண்ட சிங்கப்பூர், மற்ற நாடுகளுக்கு தர அளவுகோள். சிங்கப்பூரை நாம் வெளிநாடாக நினைப்பதில்லை. ஏனென்றால் எங்கள் தாய்மொழியாம் தமிழ் மொழி ஆட்சிமொழியாக இருப்பதனால்,” என்றார். 

“சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே தொன்றுதொட்டே சிறப்பான உறவு இருக்கிறது. சிங்கப்பூரின் அரசுப் பள்ளிகளிலும் தொடக்கநிலை முதல் தொடக்கக் கல்லூரிவரை தமிழ் இரண்டாவது மொழியாகக் கற்பிக்கப்படுகிறது என்பது, தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என வாழ்ந்துவரும் எங்களுக்கு 'தேன்வந்து பாயுது காதினிலே' என்பது போன்ற இனிய செய்தி,” என்று அவர் கூறினார். 

தமது உரையில் ஆங்கிலத்திலும் பேசிய திரு ஸ்டாலின், தாம் தமிழ்நாட்டைப் பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை என்றும் சிங்கப்பூரைத் தமிழ்நாடு தெரிந்திருப்பது போல தமிழ்நாடும் சிங்கப்பூருக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் பொருளியலை உருமாற்றவும் வளர்ச்சியை அதிகரிக்கவும் அறிவியல், தொழில்நுட்பம், உயர்கல்வி ஆகிய துறைகளில் தமிழக அரசு பெரும் திட்டங்களை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார். 

சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக துணை அமைச்சருமான எஸ். ஈஸ்வரன் சென்னையில் தம்மை சந்தித்ததையும் திரு ஸ்டாலின் நினைவுகூர்ந்தார். “அவரது பண்பினால் மகிழ்ந்துபோன நான், அடுத்த பயணமாக சிங்கப்பூர் செல்லவேண்டும் என்று திட்டமிட்டேன்,” என்றார்

“திரு ஈஸ்வரனைச் சந்தித்தபோது பொருளாதார உறவுகள், பண்பாடு மற்றும் வர்த்தகத்தைப் பற்றி விரிவாக பேசினோம். தமிழ்நாட்டின் முக்கிய முதலீட்டாளர்களில் சிங்கப்பூரும் ஒன்று என்பதை அனவைரும் அறிவீர்கள்.”

அசெண்டாஸ், டிபிஎஸ் வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஐஇ சிங்கப்பூர் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்பட தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட முப்பது  சிங்கப்பூர் நிறுவனங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட திரு ஸ்டாலின், தமிழகத்தின்மீது அதிக கவனம் செலுத்தும்படி சிங்கப்பூரைக் கேட்டுக்கொண்டார். 

தமிழ்நாட்டின் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைசார்ந்த முதலீட்டு ஊக்குவிப்புக்காக இதுவரை 222 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

“இதன்மூலம்  295,339 கோடி ரூபாய் செலவுக்கு முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.  412,565 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,800 கோடி ருபாய் முதலீட்டில் நான்கு சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்மூலம் 6,200 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் பல திட்டங்களுக்கு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.”

“இதன் சிறப்பு என்னவென்றால், பல்வேறு வகைப்பட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன,” என்று குறிப்பிட்ட திரு ஸ்டாலின், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உணவு பதனீடு, ஜவுளி ஆகியவற்றுடன் மின்வாகனங்களுக்கான மின்னூட்ட நிலையங்களையும் குறிப்பிட்டார். 

“எங்கள் மாநிலத்தின் சீரான, பரவலான வளர்ச்சியை உறுதிசெய்யும் விதமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இந்தத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாங்கள் ஒவ்வொரு துறையையும் நன்கு ஆராய்ந்து அத்துறையைச் சார்ந்த முதலீட்டு நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, அவர்களின் தேவைகளை நன்கறிந்து நிறைவுசெய்யும் விதமாக பல்வேறு துறையினருக்கான கொள்கைகளை வெளியிட்டுள்ளோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் 

நிதித் தொழில்நுட்பம், ஆய்வு மேம்பாடு, ஏரோஸ்பேஸ் மற்றும் தற்காப்புத் தொழில்நுட்பம், உணவு உள்ளிட்ட துறைகளுக்கு கொள்கைகளை அமைத்திருப்பதாக அவர் கூறினார். 

“நிதித் தொழில்நுட்பத் துறையில் உங்களின் ஆற்றலும் அனுபவமும் எங்களுக்கு மிகவும் தேவை. அடித்தட்டு மக்களுக்கு வங்கி சேவை கிடைத்திட இந்தத் தொழில்நுட்பம் உதவும்," என்றார் அவர்

இந்த ஒத்துழைப்பால் தமிழகம் முன்னேற்றம் அடைவதுடன் சிங்கப்பூரின் வணிக எல்லையும் விரிந்து பரவும் என்று திரு ஸ்டாலின் குறிப்பிட்டார். தொழிற்பூங்காக்களின் மேம்பாடு, தொழில் நகரியங்கள், துறைமுகங்களை மேம்படுத்துதல், வேளாண்மை கடல்நீரை நன்னீராக்கும் திட்டம், சுற்றுலாத்துறை உள்ளிட்ட திட்டங்களுக்கு சிங்கப்பூரின் ஒத்துழைப்பு தமிழ்நாட்டுக்கு மிக அவசியம் என்றார்.

“எங்களது முன்னேற்றப் பயணங்களில் இணைந்து அதற்கான திட்டங்களைச் செயல்படுத்த சிறப்பான பங்குதாரராக சிங்கப்பூர் கைகோக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

“தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சூழ்நிலை பிரகாசமாக இருக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளிலிருந்தும் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளிலிருந்தும் முதலீடுகள் வருகின்றன,” என்று திரு ஸ்டாலின் கூறினார். 

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் திரு ஸ்டாலின், சிங்கப்பூரிலுள்ள 60 தமிழ் அமைப்புகள் இணைந்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். சன்டெக் சிட்டிய அரங்கில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் 1,800 பார்வையாளர்கள் முன்னிலையில் திரு ஸ்டாலின், சிங்கப்பூரின் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகத்துடன் மேடையில் உரை ஆற்றினார். 

2024 ஜனவரி 10, 11 தேதிகளில் தமிழகத்தில் அனைத்துலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடக்கவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!