தெம்பனிஸ் விபத்து: ஓட்டுநருக்குச் சிறை, வாகனமோட்ட வாழ்நாள் தடை

தெம்பனிஸ் விபத்து: ஓட்டுநருக்குச் சிறை, வாகனமோட்ட வாழ்நாள் தடை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Oct 2026 - 6:40 pm

1 mins read

தெம்பனிஸ் பகுதியில் 2024ஆம் ஆண்டில் தொடர் வாகன விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநருக்குத் திங்கட்கிழமை (அக்டோபர் 5), 12 ஆண்டுகள் ஒன்பது மாதங்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர், எட்டுப் பேர் காயமடைந்தனர்.

சிங்கப்பூரரான 45 வயது முகமது ஷாஃபி இஸ்மாயில் வாகனம் ஓட்ட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. அந்த விபத்தில் 57 வயதுப் பெண்ணும் 17 வயதுத் தொடக்கக் கல்லூரி மாணவி ஒருவரும் மாண்டனர். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை ஷாஃபி ஆகஸ்ட் மாதத்தில் ஒப்புக்கொண்டார்.

மாவட்ட முதன்மை நீதிபதி தோ ஹான் லீ தீர்ப்பளிக்கும்போது, ஷாஃபி புரிந்த குற்றங்களுக்கு இத்தண்டனை பொருத்தமானது என்றும் இதன் விளைவாக இரு அப்பாவி உயிர்கள் பலியானதுடன் மாண்டோரின் குடும்பங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

2024 ஏப்ரல் 22ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில், வேனில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த திருவாட்டி நூர்சிஹான் மருத்துவமனையில் மாண்டார். பள்ளியின் குறுக்கோட்டப் போட்டியில் பங்கேற்கத் தந்தையின் காரில் சென்ற மாணவி, காரின் அடியில் சிக்கி உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அம்மாணவியின் பெற்றோர் மருத்துவச் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

விபத்தில் காயமடைந்த ஷாஃபி, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய இரண்டு நாள்களுக்குப்பின் கைது செய்யப்பட்டார். அரசுத் தரப்பு கடுமையான தண்டனையைக் கோரிய நிலையில், தற்காப்பு வழக்கறிஞர் ஷாஃபியின் செயல் கவனக்குறைவால் நேரிட்டது என்று வாதிட்டார்.

குறிப்புச் சொற்கள்
தெம்பனிஸ்விபத்துவாகனம்ஓட்டுநர்தடைசிறைத்தண்டனை