தெம்பனிசில் சிவப்புப் போக்குவரத்துச் சமிக்ஞை விளக்கைத் தாண்டி வாகனம் ஓட்டியதன் விளைவாக இருவர் உயிரிழக்கக் காரணமாக இருந்த வாகனவோட்டிக்கு 13.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும்படி வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.
சிங்கப்பூரரான 45 வயது முகம்மது ஷாஃபி இஸ்மாயில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதில் பல்வேறு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
அதை முன்னிட்டு வாகனம் ஓட்டுவதிலிருந்து ஷாஃபிக்கு வாழ்நாள் தடை விதிக்கும்படி அரசாங்கம், தற்காப்பு என இருதரப்பு வழக்கறிஞர்களும் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) நீதிமன்றத்தில் கோரினர்.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி, போக்குவரத்து உச்சநேரத்தில் விபத்து நேர்ந்தது. அப்போது மோதிக்கொண்ட பல வாகனங்களில் பெரும்பாலானவற்றை ஓட்டியவர்கள் பள்ளிக்குப் பிள்ளைகளைவிடச் சென்ற பெற்றோர்.
பள்ளிக்குத் தந்தையுடன் சென்றுகொண்டிருந்த 17 வயது மாணவியும் வேனுக்குப் பின்னால் அமர்ந்திருந்த 57 வயதுப் பெண்ணும் அவ்விபத்தில் மாண்டனர்.
பிடோக்கில் தம்மை முந்திச் சென்ற வாகனவோட்டியை முந்தவேண்டும் என்பதற்காக ஷாஃபி, மணிக்கு 122 கிலோமீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டத் தொடங்கினார்.
பிடோக் ரெசர்வோர் சாலையில் உள்ள தடங்களில் வாகனத்தைத் தாறுமாறாக ஓட்டிய அவர், மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர்மீது மோதியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
தெம்பனிஸ் அவென்யூ 1க்கும் அவென்யூ 4க்கும் இடைப்பட்ட சந்திப்பை எட்டும்வரை ஷாஃபி வாகனத்தை அதிவேகமாக ஓட்டினார்.
அந்தச் சந்திப்பில் இருந்த போக்குவரத்துச் சமிக்ஞை விளக்கு கிட்டத்தட்ட 26 நொடிகளுக்கு சிவப்பில் இருந்தபோது ஷாஃபி தமது வாகனத்தை மணிக்கு 126 கிலோமீட்டருக்கும் 134 கிலோமீட்டருக்கும் இடைப்பட்ட வேகத்தில் ஓட்டினார்.
இருபுறமும் அப்போது வாகனங்கள் வந்துகொண்டிருந்தன. ஷாஃபி மூன்று வாகனங்கள்மீது மோதியதில் அவை சுழன்று வேனின்மீதும் பள்ளிப் பேருந்தின்மீதும் மோதின.
அதில் மூவர் படுகாயமுற்றனர். 11 வயதுப் பிள்ளைகள் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்தில் மாண்ட 17 வயது இளையரின் தாய் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதுடன் வாழ்வதில் இனி அர்த்தமில்லை என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதற்குமுன், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சாலை விதிமுறைகளை ஷாஃபி மீறியிருந்ததும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஷாஃபி தம்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவருக்குத் தண்டனை விதிக்கும்போது மற்ற குற்றச்சாட்டுகளும் கவனத்தில் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.


