தெம்பனிஸ் வட்டாரத்தில் ஆறு வாகன விபத்துக்குக் காரணமாக இருந்த ஆடவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியன்று நிகழ்ந்த விபத்தில் இருவர் மாண்டனர்.
அவர்களில் தெமாசெக் தொடக்கக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்.
இந்நிலையில், திங்கட்கிழமையன்று (ஜூன் 9) முகம்மது ஷியாஃபி இஸ்மாயில் என்ற அந்த ஓட்டுநர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக அவர் மீது நான்காவது குற்றச்சாட்டு பதிவானது.
வாகன ஓட்டுநர்களான 65 வயது திரு சியா டோங் சாய், 49 வயது திரு முகம்மது அஸ்ரீல் மஹ்முட் ஆகியோருக்குக் காயம் விளைவித்ததாக 44 வயது ஷியாஃபி மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதற்கு முன்பு, அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததாகவும் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி காயம் விளைவித்ததாகவும் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதாகவும் விபத்து நிகழ்ந்த பிறகு வாகனத்தை நிறுத்தத் தவறியதாகவும் ஷியாஃபி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தற்போது, ஷியாஃபி மீது மொத்தம் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் ஷியாஃபிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.
எஞ்சியுள்ள இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்படும்போது கருத்தில் கொள்ளப்படும்.
ஷியாஃபி $30,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதியன்று அவர் மீது முதன்முதலாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளுடன் ஷியாஃபி தொடர்புகொள்ளக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரது நடமாட்டத்தைக் கண்காணிக்க அவர் உடலில் மின்னணுப் பட்டை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
ஷியாஃபி அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் மாணவியான 17 வயது அஃபிபா முனிரா முகம்மது அஸ்ரிலும் மூத்த தொழில்நுட்பரான 58 வயது நூர்ஸிஹான் ஜுவாஹிப்பும் உயிரிழந்தனர்.
42 வயது திருவாட்டி லீ யாவ் மெங், 42 வயது திரு வெங் ஹாய்ஃபெங், 39 வயது திரு முகம்மது அஸ்மான் முகம்மது என்ஜா ஆகியோர் விபத்தில் காயமடைந்தனர்.
விபத்தில் 11 வயது சிறுவர்கள் இருவரும் காயமுற்றனர்.
இந்த வழக்கு தொடர்பான வழக்கிற்கு முந்திய கலந்துரையாடல் ஜூன் மாதம் 26ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது.

