தெம்பனிஸ், அங் மோ கியோ குழுத்தொகுகளில் பன்முனைப் போட்டி

2 mins read
e588052a-13ff-412d-9bc0-e22870239e54
தெம்பனிஸ், அங் மோ கியோ குழுத்தொகுதிகளில் களமிறங்கப்போவதாக மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் மக்கள் சக்தி கட்சி அங் மோ கியோ, தெம்பனிஸ் குழுத்தொகுதிகளில் போட்டியிடப்போவதாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) அறிவித்துள்ளது.

தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதி, நீ சூன் குழுத்தொகுதி, ஜாலான் காயு தனித்தொகுதி ஆகியவற்றிலும் களமிறங்கத் தயார் என்று கட்சி இதற்குமுன் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சிக்கு வழிவிட நீ சூன் குழுத்தொகுதியிலிருந்து பின்வாங்குவதாக மக்கள் சக்தி கட்சி சொன்னது.

மக்கள் சக்தி கட்சியின் தலைமைச் செயலாளர் கோ மெங் செங் தெம்பனீஸ் அணியை வழிநடத்துவார். அவருடன் நிலவனப்பு நிர்வாகி வீரா நாதன், 26, பசுமை தொழில்நுட்ப நிறுவனத்தைத் தோற்றுவித்த பீட்டர் சோ, 65, தொழில்முனைவர் அர்பா ஹரூன், 50, கட்சித் தலைவர் டெர்ரிக் சிம், 44 ஆகியோர் களமிறங்குகின்றனர்.

அங் மோ கியோ குழுத்தொகுதியில் முன்னாள் அரசாங்க ஊழியர் மார்ட்டின் ஹோ, 64, பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தேடஸ் தோமஸ், 43, தோட்டக்கலை நிபுணர் ஹெங் செங் டாவ், 24, தகவல், தொழில்நுட்பப் பொறியாளர் சேமுவல் லீ, 33 ஆகியோர் போட்டியிடுகின்றனர். அந்த அணியை மக்கள் சக்தி கட்சியின் பொருளாளரும் லிமொஸின் சேவை வழங்குபவருமான 47 வயது திரு வில்லியம் லிம் வழிநடத்துவார்.

வெவ்வேறு பகுதிகளில் முரணான விருப்பங்களுடன் பல வேட்பாளர்கள் இருப்பதாக திரு கோ மெங் செங் செவ்வாய்கிழமை (ஏப்ரல் 22) செய்தியாளர் கூட்டத்தில் சொன்னார்.

இன்னும் பெரிய கட்சிகளுக்கு வழிவிடவேண்டும் என்பதற்காக தெம்பனீஸ் சங்காட், ஜாலான் காயு ஆகிய தனித்தொகுதிகளிலிருந்து பின்வாங்கியதாகச் சொன்ன அவர், “எங்கள் வேட்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நிச்சயம் அது ஏமாற்றத்தை அளிக்கும் என்று தெரிந்தும் முடிவெடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது,” என்றார்.

தெம்பனிஸ் குழுத்தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு நான்கு கட்சிகள் தற்போது களமிறங்குகின்றன.

மக்கள் செயல் கட்சி, பாட்டாளிக் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி ஆகியவையும் தெம்பனிசில் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.

அங் மோ கியோவில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் தலைமையில் மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் ஐக்கிய கட்சியும் களமிறங்குகின்றன.

இத்தகைய கடும் போட்டிக்காக தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியிடமும் சிங்கப்பூர் ஐக்கிய கட்சியிடமும் மன்னிப்புக் கேட்பதாகத் திரு கோ கூறினார்.

கடும் போட்டிக்காக தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியிடமும் சிங்கப்பூர் ஐக்கிய கட்சியிடமும் தலைவணங்கி மன்னிப்புக் கேட்ட மக்கள் சக்தி கட்சி.
கடும் போட்டிக்காக தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியிடமும் சிங்கப்பூர் ஐக்கிய கட்சியிடமும் தலைவணங்கி மன்னிப்புக் கேட்ட மக்கள் சக்தி கட்சி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்