தெம்பனிஸ் எங்களுக்காகக் காத்திருந்தது: ஃபைசல் மனாப்

2 mins read
35017583-83f8-4ecd-aef8-88eb5dfa1bd0
தெம்பனிஸ் வட்டாரவாசிகளிடமிருந்து கிடைத்த ஆதரவு தம் உள்ளத்தை நெகிழ வைத்ததாகக் கூறினார் அக்குழுத்தொகுதியின் பாட்டாளிக் கட்சி அணிக்குத் தலைமையேற்றுள்ள திரு ஃபைசல் மனாப். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

மலாய் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் இனம், சமயம் பாராமல் அனைத்துக் குடியிருப்பாளர்களின் ஒரு குரலாக சேவையாற்ற இருப்பதாகத் தெம்பனிஸ் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி சார்பில் போட்டியிடும் திரு ஃபைசல் மனாப் தெரிவித்துள்ளார்.

“ஒரு சிறிய சமூகத்தை சேர்ந்த நான், பெரும்பான்மையினராக உள்ள சீனர்களுக்குக் கைகொடுப்பதில் எந்தத் தடையும் இல்லை,” என்ற திரு மனாப், 14 ஆண்டுகள் காக்கி புக்கிட் வட்டாரத்தில் சேவையாற்றியபோதும் இதே உணர்வுதான் இருந்தது என்றும் சொன்னார்.

இதுபற்றி, காக்கி புக்கிட் குடியிருப்பாளர்களிடம் நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று திங்கட்கிழமை (ஏப்ரல் 28) தெம்பனிசில் தொகுதி உலா மேற்ககொண்டபோது செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மக்கள் செயல் கட்சியின் சார்பில் தெம்பனிஸ் குழுத்தொகுதியில் போட்டியிடும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லிக்கு எதிராகக் களமிறங்குவது பற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.

“ஓர் அணி மற்றொரு அணியுடன் போட்டியிடுவதைத் தவிர, நான் மசகோஸுக்கு எதிராகச் செல்வதாக க் கருதவில்லை,” என்றார் திரு மனாப்.

மசெக நிறுவிய குழுத்தொகுதி அமைப்புக்குச் சிறுபான்மை இனத்தவர்கள் தேவை என்பதால் தாம் பாட்டாளிக் கட்சியின் தெம்பனிஸ் குழுத்தொகுதியின் சிறுபான்மைச் சமூக பிரதிநிதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் செயல்பட்டுவரும் சிங்கப்பூர் சமயப் போதகர் நூர் டிரோஸ், தேர்தலில் போட்டியிடும் பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த மலாய் வேட்பாளர்களிடம் பேசியதாகக் கூறியதைத் தொடர்ந்து, அதுபற்றித் திரு மனாப் தமது கருத்துகளை தெரிவித்தார்.

“வெவ்வேறு கருத்துகளை கேட்பதற்காக அனைவரையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். அதுவே பன்முகத்தன்மையின் அழகு, முன்னேற்றத்திற்கான படி,” என்றார் அவர்.

இருப்பினும், கேட்பதெல்லாம் செவிமடுக்க அல்ல என்றும் அவர் சொன்னார்.

திரு நூரின் பரிந்துரை காரணமாக அவருக்கு வாக்களிக்கக்கூடியவர்களைப் பற்றிக் கேட்டபோது, ​​ வாக்காளர்கள் அனைவரும் வெவ்வேறு தெரிவுகளை எடைபோடும் அறிவாளிகள் என்றும் அதனை அவர்களிடம் விட்டுவிடுகிறோம் என்று திரு மனாப் தெரிவித்தார்.

கடந்த சில நாள்கள்ளில் தொகுதி உலா சென்றபோது தெம்பனிஸ் வட்டாரவாசிகளிடமிருந்து கிடைத்த ஆதரவு தம்மை நெகிழச் செய்வதாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

“பாட்டாளிக் கட்சி தெம்பனிஸ் குழுத்தொகுதியில் போட்டியிடுவதற்காக பல ஆண்டுகள் காத்திருந்ததாக அவர்கள் கூறினர்,” என்றார் திரு மனாப்.

“அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், வீட்டு விலைகள் பற்றி தொகுதியில் உள்ள மக்கள் எங்களிடம் பகிர்ந்துகொண்டனர். இந்தச் சவால்களை சரிவரக் கையாள முயல்வோம்,” என்று தெம்பனிஸ் குழுத்தொகுதி பாட்டாளிக் கட்சி வேட்பாளர்களுள் ஒருவரான மைக்கல் திங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்