பொதுத்தேர்தலில் புதிய தனித்தொகுதியான தெம்பனிஸ் சங்காட்டில் மக்கள் செயல் கட்சியின் (மசெக) முன்னாள் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் சூ போட்டியிடுகிறார்.
கட்சி அந்த விவரங்களை புதன்கிழமை (ஏப்ரல் 16) உறுதிப்படுத்தியது.
திரு சூ, 2015ஆம் ஆண்டிலிருந்து தெம்பனிஸ் குழுத்தொகுதியின் சங்காட் பகுதியைப் பிரதிநிதித்து வந்தார்.
வடகிழக்கு வட்டார மேயராகப் பொறுப்பு வகிக்கும் திரு சூ, தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் உதவி தலைமைச் செயலாளராகவும் அதன் கொள்கைத் துறை இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
“சங்காட் என்பது எனக்கு வெறும் ஒரு தொகுதியன்று.
“இது நமது வீடாகும். நாம் இங்கு ஒன்றுபட்டு, சவால்களை எதிர்கொண்டு, அக்கறையுடன் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்கியுள்ளோம்,” என்றார் அவர்.
கடந்த பத்து ஆண்டுகளாகச் சங்காட் வட்டார மக்களுக்குச் சேவை ஆற்றும் பெருமையைப் பெற்றிருந்ததாக அவர் தெரிவித்தார்.
தனித்தொகுதியாகப் பிரிக்கப்பட்டாலும் தெம்பனிஸ் சங்காட்டுக்கும் தெம்பனிஸ் குழுத்தொகுதிக்கும் இடையிலான உறவுகள் தொடரும் என்றும் வளங்கள் இருபக்கத்திலும் பகிரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

