சாங்கியை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் பொங்கோல் வெளிவாயிலுக்கு முன்பு நடந்த விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.
சனிக்கிழமை (ஜூன் 6) பிற்பகல் 12.10 மணியளவில் லாரியும் மோட்டார்சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்த தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினரும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினரும் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த ஒருவரைச் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
52 வயது ஆடவரான அந்த மோட்டார்சைக்கிள் ஓட்டுநர், சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் பின்னர் அவர் அங்கு உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
லாரியின் பின்பக்க பம்பருடன் (bumper) மோட்டார்சைக்கிள் பலமாக மோதியிருப்பதைச் சமூக ஊடகங்களில் வலம் வரும் காணொளியில் காண முடிகிறது. மோட்டார்சைக்கிள் பாகங்களின் சிதைவுகள் சாலையில் சிதறிக் கிடப்பதும் புலப்பட்டது.
ஆடவர் மூவர் மோட்டார்சைக்கிளைச் சுற்றி நிற்பதையும் மோட்டார்சைக்கிளின்மீது வெள்ளைத் துணி ஒன்று போர்த்தப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
இது குறித்த விசாரணை தொடர்கிறது.
2025ல் சிங்கப்பூரின் மொத்த வாகன எண்ணிக்கையில் மோட்டார்சைக்கிள்கள் 15 விழுக்காடு மட்டுமே இருந்தபோதிலும், ஒட்டுமொத்தப் போக்குவரத்து விபத்துகளில் 54.8 விழுக்காட்டு விபத்துகளில் மோட்டார்சைக்கிளோட்டிகளும் பின்னிருக்கையில் அமர்ந்து செல்வோருமே சம்பந்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தங்களின் வருடாந்தரச் சாலைப் போக்குவரத்துப் புள்ளிவிவரங்களில் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், சாலை விபத்தில் உயிரிழந்தோரில் 53 விழுக்காட்டினர் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்களாகவும் அவர்கள் பின்னால் அமர்ந்து செல்பவர்களாகவும் உள்ளனர்.
மோட்டார்சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 2024ல் 3,973லிருந்து 2025ல் 4,227 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்ட மோட்டார்சைக்கிளோட்டிகள், பின்னிரிக்கையில் அமர்ந்து செல்பவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை 2024ல் 4,510லிருந்து 2025ல் 4,844 ஆக அதிகரித்தது.

