தெம்பனிஸ் நகர மன்றத்தை 233,000 வெள்ளி மோசடி செய்த ஆடவருக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜாங் சுயன் என்னும் அந்த 59 வயது ஆடவர் சாதாரண தண்ணீர் குழாய்களை விலை உயர்ந்த பொருள் எனக் கூறி அதிக விலைக்கு விற்றுள்ளார்.
ஜாங் குற்றம் செய்தபோது FYH Integrated என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். அந்த நிறுவனம் மின் மற்றும் இயந்திர பராமரிப்பு மற்றும் நிறுவல் சேவைகளை வழங்கும் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜாங்கின் நிறுவனம் 2016ஆம் ஆண்டிலிருந்து தெம்பனிஸ் நகர மன்றத்திற்குத் தண்ணீர் குழாய்கள் தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது.
2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை தெம்பனிஸ் வட்டாரத்தில் 267 தண்ணீர் குழாய்களை ஜாங்கின் நிறுவனம் மாற்றியுள்ளது.
ஒவ்வொரு தண்ணீர் குழாயும் கிட்டத்தட்ட 550 வெள்ளி மதிப்புடையது. அதை ஜாங் 1,400 வெள்ளி என மோசடி செய்தார்.
ஆடவரின் மோசடிச் செயல்கள் அந்த ஆண்டே நகர மன்றத்தால் கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது.
ஜாங் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏப்ரல் மாதத்தில் ஒப்புக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரரான ஜாங், குற்றஞ்சாட்டப்படுவதற்கு முன்னரே தான் மோசடி செய்த தொகையை முழுமையாகத் தெம்பனிஸ் நகர மன்றத்திடம் கொடுத்துவிட்டார்.
ஆடவர் பணத்தைத் திருப்பிக்கொடுத்திருந்தாலும் பொது நிதியை ஓராண்டுக்கு மேலாக வைத்திருந்தது, ஏமாற்றியதற்காக அவருக்குத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

