ஈமச் சடங்குகளை நடத்துவதற்கும் இறந்தோரின் அஸ்தியை வைப்பதற்குமான வளாகத்தை தானா மேரா கோஸ்ட் சாலையில் உள்ள ஒரு பகுதியில் உருவாக்க முடியுமா என்று ஆராய்கிறது தேசியச் சுற்றுப்புற வாரியம்.
பல்வேறு அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பிறகு அந்த இடம் அடையாளம் காணப்பட்டதாக வாரியம் சொன்னது.
தானா மேராவைத் தவிர்த்து மண்டாய் அவென்யூவிலும் ஈமச் சடங்குகள், அஸ்தி மாடத்துக்கான வளாகத்தைக் கட்ட ஆலோசிக்கப்படுகிறது.
மண்டாய் அவென்யூவுக்கும் செம்பவாங் சாலைக்கும் இடையிலான சந்திப்பைப் புதிய வளாகத்துக்குப் பொருத்தமான இடமாகத் தேசியச் சுற்றுப்புற வாரியம், 2023ஆம் ஆண்டு டிசம்பரில் அடையாளம் கண்டது.
சிங்கப்பூரில் 2040ஆம் ஆண்டுக்குள் மரண எண்ணிக்கை சுமார் 40,000க்கு அதிகரிக்கக்கூடும் என்பதால் ஈமச் சடங்குகளை நடத்தவும் அஸ்திகளை வைப்பதற்கும் தகுந்த இடத்துக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கம் தற்போது மூன்று அஸ்திமாடங்களை நிர்வகிக்கிறது.
அவை சுவா சூ காங், மண்டாய், ஈசூனில் அமைந்துள்ளன.
மண்டாயிலும் தானா மேராவிலும் உள்ள இடங்களின் ஆய்வு முடிவுகள் வெளிவந்தவுடன் எந்த இடத்தில் புதிய வளாகத்தை உருவாக்கலாம் என்று முடிவெடுக்கப்படும்.

