தஞ்சோங் காத்தோங் சாலையில் உண்டான புதைகுழிக்குக் காரணமான மண்ணரிப்பு ஒரே இரவில் ஏற்படவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மாறாக, நிலத்துக்கு அடியில் முன்கூட்டியே ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக புதைகுழி ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
“புதைகுழிகள் திடீரென உண்டாகாது. அதைச் சுற்றி சிறிது காலத்துக்கு மண்ணரிப்பு ஏற்படும்போது நாளடைவில் பள்ளம் பெரிதாகும்,” என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் புவியியல் தொழில்நுட்பப் பொறியியல் நிபுணர் பேராசிரியர் வூ வெய்.
புதைகுழி ஏற்படுவதற்கு முன் சாலையின் மேற்பரப்பில் விரிசல்கள் உண்டாகலாம். ஆனால், அவற்றை எளிதில் பார்க்க முடியாது என்று பேராசிரியர் வூ சொன்னார்.
ஒருசில தருணங்களில் சாலை ஏற்ற இறக்கமாக இருப்பதோடு விரிசல்களையும் சாலையின் மேற்பரப்பில் நீர்க்குமிழிகளையும் காண முடியும் என்று சிங்கப்பூர்ப் பொறியாளர்கள் கழகத்தின் கட்டட, கட்டமைப்புக் குழுத் தலைவரும் பொறியியல் நிபுணருமான திரு டேவிட் இங் குறிப்பிட்டார்.
சாலையின் சில படங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், புதிதாகப் பூசப்பட்ட தார், மேற்பரப்பில் உள்ள விரிசலைச் சரிசெய்வதற்காக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்புப் பணிகளைக் காட்டுவதாகக் கூறினார்.
புதைகுழி ஏற்பட்டதற்கான காரணத்தை இப்போதே கூற முடியாவிட்டாலும் நிலத்துக்கு அடியில் உள்ள பழைய குழாயிலிருந்து கசிந்த நீர் மண்ணரிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று திரு இங் குறிப்பிட்டார்.
“நீர்க் கசிவு ஏற்படும் குழாய்களைப் பொறுத்தவரை கூடுதல் காலத்துக்கு இதுபோல நிகழ்ந்தால் அது பள்ளத்தை ஏற்படுத்தி புதைகுழிக்கு இட்டுச் செல்லும்,” என்று திரு இங் சொன்னார்.
இது நிலத்துக்கு அடியில் நடைபெறுவதால் நமக்கு அது தெரியாமல் இருக்கலாம் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
புதைகுழி ஏற்படுவதற்கு ஓர் இரவுக்கு முன் அந்த வட்டாரத்தில் உள்ள தண்ணீர்க் குழாய் ஒன்று வெடித்ததாக சம்பவ இடத்துக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
அதைக் கண்காணித்திருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
சிங்கப்பூரில் இதுபோன்ற புதைகுழி ஏற்படுவது முதல்முறை அல்ல. 2022 நவம்பரில் சுரங்கப் பணிகள் காரணமாகப் புதைகுழி ஏற்பட்டதால் ஹாலந்து சாலை முதல் காமன்வெல்த் சாலை வரை போக்குவரத்துக்கு மூடப்பட்டது