தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தஞ்சோங் காத்தோங் புதைகுழி: ஆகஸ்ட் 2 நண்பகலிலிருந்து சாலை கட்டங்கட்டமாகத் திறக்கப்படும்

2 mins read
2a006fc1-231d-4d80-a35f-e4444a4d5562
ஜூலை 29ஆம் தேதி தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத்தில் பழுதுபார்ப்புப் பணிகள் நடைபெற்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட புதைகுழியை முன்னிட்டு மூடப்பட்ட சாலைப் பகுதி சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) நண்பகலிலிருந்து போக்குவரத்துக்குக் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும்.

நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) ஃபேஸ்புக்கில் அதனைத் தெரிவித்தது.

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயிலிருந்து மௌன்ட்பேட்டன் ரோட்டுக்குச் செல்லும் சாலைப் பகுதி சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) நண்பகல் 12 மணிக்குப் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்படும். மௌன்ட்பேட்டன் ரோட்டிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே செல்லும் சாலைப் பகுதி திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) அதிகாலை 5 மணிக்குத் திறந்துவிடப்படும்.

பேருந்துச் சேவை எண்கள் 36, 48 இரண்டும் தற்காலிகமாக வேறு பாதைகளுக்கு மாற்றிவிடப்பட்டிருந்தன. சனிக்கிழமை நண்பகல் முதல் அவை சாங்கி விமானநிலையம், பிடோக் நோக்கிச் செல்லும் கிழக்குத் திசையில் வழக்கம்போல் செயல்படும்.

திங்கட்கிழமையிலிருந்து (ஆகஸ்ட் 4) அந்தப் பேருந்துச் சேவைகள் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே வழியாக நகரம் நோக்கிச் செல்லும் மேற்குத் திசையிலும் இயல்புநிலைக்குத் திரும்பும்.

சாலைப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக ஆணையம் குறிப்பிட்டது.

நிலத்திற்கு அடியில் சேதமடைந்த பகுதிகள் பழுதுபார்க்கப்படுகின்றன.

புதைகுழியை நிரப்பிய பிறகு, அதிகாரிகள் கடந்த வாரம் கடுமையான சோதனைகளை மேற்கொண்டதாகப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அவர்கள் எதனையும் கண்டுபிடிக்கவில்லை என்றும் அது சொன்னது.

தேசியத் தண்ணீர் அமைப்பான பியூபி (PUB) அதன் பழுதுபார்ப்புப் பணிகளை நிறைவேற்றியுள்ளது. பாதிக்கப்பட்ட சாலைப் பகுதிகளிலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலைகளிலும் பாதுகாப்பு மதிப்பீடுகளை அது முடித்துவிட்டது.

கட்டட, கட்டுமான ஆணையத்துடன் ஆலோசித்த பிற்கு சோதனைகள் நடத்தப்பட்டன. பாதிக்கப்பட்டிருந்த சாலைகள் இப்போது பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பாக இருப்பதைச் சோதனைகள் உறுதிசெய்துள்ளதாக ஆணையம் குறிப்பிட்டது.

சாலை மூடப்பட்ட காரணத்தைப் புரிந்துகொண்டதற்காகவும் பொறுமையோடு இருந்ததற்காகவும் ஆணையம் வாகனவோட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டது.

மௌன்ட்பேட்டன் ரோட்டுக்கும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேக்கும் இடையில் தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத்தின் ஒரு பகுதியில் ஜூலை 26ஆம் தேதி திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. அதற்குள் ஒரு கார் விழுந்துவிட்டது. காருக்குள் இருந்த பெண் ஓட்டுநரை அருகில் வேலைசெய்த கட்டுமான ஊழியர்கள் சிலர் பின்னர் பாதுகாப்பாக மேலே கொண்டுவந்தனர்.

குறிப்புச் சொற்கள்