கூடுதல் பேருந்து நிறுத்தங்கள், சக்கர நாற்காலிப் பயனாளர்களின் வசதிக்கு கூடுதல் சரிவுப் பாதைகள், கூடுதல் மின்தூக்கிகள், மழையிலிருந்து மக்களைக் காக்கும் கூரைவேய்ந்த நடைபாதைகள்.
தஞ்சோங் பகார் நகர மன்றத்தின் ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்த வசதிகள் உள்ளடங்கியுள்ளன. 2030க்குள் இடம்பெறவிக்கும் இந்த மேம்பாடுகளை விவரிக்கும் இத்திட்டத்தை ஒட்டிய அறிமுக நிகழ்ச்சியும் கண்காட்சியும் ரெட்ஹில் ஈரச்சந்தை நெடுகிலுள்ள திறந்த நடைபாதையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) நடைபெற்றன.
சிங்க நடனம், கடல்நாக நடனப் படைப்புடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ராடின் மாஸ் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங்குடன் கல்வி அமைச்சர் சான் சுன் சிங், கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் ஆல்வின் டான், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அனைவராலும் பயன்படுத்தப்படும் இடங்களை மேம்படுத்துவது, இணைப்பு வசதிகளை வலுப்படுத்துவது, சுற்றுப்புறத்துக்கு ஏதுவான சமூகங்களை அமைப்பது என மூன்று முக்கியக் கூறுகளை இத்திட்டம் உள்ளடக்கும் என்று திரு யோங் கூறினார்.
“இதற்காக நாங்கள், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துடனும் மற்ற அமைப்புகளுடனும் அணுக்கமாகச் செயலாற்றி, சமூக நடுவங்களுக்கும் அக்கம்பக்கக் கடைகளுக்கும் இதர வசதிகளுக்கும் புத்துணர்வு தரும் புதுப்பிப்புகளைச் செய்யவுள்ளோம்,” என்றார் தஞ்சோங் பகார் நகர மன்றத் தலைவருமான திரு யோங்.
கூடுதலான பசுமை இடங்களும் வட்டாரவாசிகள் சந்திப்பதற்கான இடங்களும் அமைக்கப்படும் என்றும் திரு யோங் குறிப்பிட்டார். புதிய வசதிகளைச் சேர்ப்பது மட்டுமின்றி, தற்போதைய குடியிருப்புப் பேட்டைகளை மேம்படுத்தி ஒவ்வொரு பேட்டையின் தனித்துவத்தைக் கட்டிக்காக்க அரசாங்கம் முற்படுவதாக அவர் கூறினார்.
“புக்கிட் மேராவில் பல்வேறு மரபுடைமைத் திட்டங்களுக்காக உழைத்து அந்த மொத்த இடத்தை வாழும் அரும்பொருளகமாக மாற்ற எண்ணுகிறோம். இதனால், சுவாரசிய நினைவுகளும் புகைப்படங்களும் கொண்டுள்ள குடியிருப்பாளர்கள் முன்வரும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார் திரு யோங்.
கூடுதல் இணைப்புகள், மேம்பட்ட போக்குவரத்து வசதிகள்
போக்குவரத்து மேம்பாடுகளைப் பற்றி பகிர்ந்த திரு யோங், கூடுதல் பேருந்து நிறுத்தங்களுடன் வட்ட ரயில் பாதையை முழுமையாக்கும் கெப்பல், கெண்டன்மண்ட் என இரண்டு நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மின்வாகன மின்னேற்ற நிலையங்களும் சைக்கிள் நிறுத்தங்களும் அதிகரிக்கப்படும். அத்துடன், தஞ்சோங் பகாரிலுள்ள 156 வீடமைப்பு வளர்ச்சிக் கழக கார் நிறுத்தங்கள் அனைத்திலும் வாகன மின்னேற்ற வசதிகள் இவ்வாண்டின் இறுதிக்குள் அமைக்கப்படும்.
மேலும், தஞ்சோங் பகார் எங்கும் அடுத்த ஐந்தாண்டுகளில் 58,000 சூரிய மின்சக்தித் தகடுகள் வரை பொருத்தப்படும். உணவுப் பொருள்களை மறுபயனீடு செய்யும் சாதனம் தற்போது ரெட்ஹில் ஈரச்சந்தையிலும் தஞ்சோங் பகார் கடைத்தொகுதியிலும் சோதிக்கப்படுவதாக திரு யோங் சுட்டினார்.
கடந்த ஐந்தாண்டுகளாக செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் தொடர்ச்சியாக இத்திட்டம் இருப்பதாகவும் திரு யோங் குறிப்பிட்டார்.
மக்கள் வரவேற்பு, கருத்துகள்
ரெட்ஹில் ஈரச்சந்தைக்கு அருகில் வசிக்கும் திருவாட்டி காளியம்மா மாரி, 84, புதிய வசதிகளை வரவேற்கிறார்.
“இருந்தபோதும், அடித்தள அளவில் கூடுதலானோர் என்னைப்போல தனிமையில் இருக்கும் முதியோரை அணுகி எங்கள் தேவைகளைப் புரிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
சிடிசி பற்றுச்சீட்டுகள் மூலம் உதவி பெற்றது குறித்து மனநிறைவு பெறும் இல்லத்தரசி சாவித்திரி காளியப்பா, 74, இதுவரை செய்யப்பட்ட மேம்பாடுகள், குறிப்பாக நடைபாதை மேம்பாடுகள் திருப்தி அளிப்பதாகச் சொன்னார்.